கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை என குற்றம் சுமத்தி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் கெபித்திகொல்லேவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் நான்கு உத்தியோகத்தர்களுடன் அப்பகுதிக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஒரு கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.
அப்போது பொலிஸ் சார்ஜன்ட் மீது சிலர் தாக்குதல் நடத்தி அவரது துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த கெபித்திகெல்லேவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வானத்தை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதன்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.