(file photo)
இன்று நடைபெறவுள்ள பாரிய போராட்டத்திற்கு பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதன்படி, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வரும் இந்த பேரணி காரணமாக ஏனைய பிரஜைகள் சுதந்திரமாக பயணிக்கும் உரிமை தடைப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஈ.என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டைப் பிரதேசத்தில் அதிகளவான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளதால், அவற்றில் பணிபுரிபவர்களும், சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தினந்தோறும் வருவோரும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இடையூறு ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோட்டை பகுதியிலுள்ள கடைகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்தப் போராட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.