ஆசிரியர் பணிக்கு வெளியில் சமூக சீர்திருத்த செயற்பாட்டாளராக பணியாற்றியவர்: அன்சார் ஆசிரியர் மறைவு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அனுதாபச் செய்தி

Date:

திஹாரி, ஹிஜ்ரா மாவத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் சமூக சீர்த்திருத்தச் செயற்பாட்டாளருமான அன்சார் ஆசிரியர் இன்று தனது 75வது வயதில் காலமானதை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டது.

கேகாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பொல்கஹவலை முஸ்லிம் பாடசாலை, ரம்புக்கன முஸ்லிம் பாடசாலை, மற்றும் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியராகவும் கொழும்பு அல்-நாஸர் பாடசாலையின் பிரதி அதிபராகவும், கொழும்பு சென்.செபஸ்டியன் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆசிரியர் பணிக்கு வெளியில் அவர் முன்னணி சமூக சீர்த்திருத்தச் செயற்பாட்டாளராக தன்னார்வமாகப் பணியாற்றியவர். ஊர் மற்றும் பிரதேச எல்லைகள் தாண்டி தேசிய ரீதியான பணிகளில் பங்கெடுத்தவர்.

1980 காலப்பகுதியில் ஜமாஅத்தே இஸ்லாமியால் ஆரம்பிக்கப்பட்ட ‘தஃவதுல் குர்ஆன்’ நிகழ்ச்சித் திட்டத்தின் பொறுப்பாளராக மிக நீண்ட காலம் அவர் செயற்பட்டார். ரமழான் ஆரம்பிப்பதற்கு முன் கொழும்பு 09 ல் அமையப் பெற்றுள்ள ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு நாள் தோறும் மாலை வேலைகளில் சமூகம் தந்து நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ‘அல்குர்ஆனை ஓதுவோம், படிப்போம், விளங்குவோம், அதன் வழிநடப்போம்’ என்ற போஸ்டரை அனுப்பி அச்செய்தியை சமூகமயப்படுத்துவதற்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு வழங்கியவர்.

மேலும் மாவனல்லை, வலவ்வத்தையில் அமையப்பெற்றிருந்த தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கிறார்.

2009ல் திஹாரியில் தன்வீர் அகடமி ஆரம்பிக்கும் செயற்பாடுகளில் A.L.M. இப்ராஹீம் ஹஸரத் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களில் அன்சார் சேர் அவர்கள் முக்கியமானவர். தன்வீர் நிர்வாக சபை உறுப்பினராக, செயலாளராக பணியாற்றிய அவர் தனது கடைசி நேரம் வரை அதனை தனது மிகப் பெரிய இலக்குகளில் ஒன்றாகக் கொண்டு வாழ்ந்தவர்.
கடைசியாக அவர் 24.10.2022 நடந்த ஒரு நிகழ்வில், தன்வீரின் ஆரம்பம் குறித்த தனது அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பரிமாறிக்கொண்டார்.

அதுமட்டுமன்றி, நேற்றைய தினம் அஸர் தொழுகைக்குப் பிறகும் அவர் தன்வீருக்கு விஜயம் செய்து புதிதாக பதவியேற்ற அதிபரோடு தன்வீர் விடயங்கள் குறித்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அவரது உயிர் பிரிவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, அவரது சுகவீன நிலைப் பற்றி தெரிந்திராத நிலையில் ஒரு கலந்துரையாடலில் அவர் ஞாகப்படுத்தப்பட்டார்.

குறித்த ஒரு விடயத்திற்காக அவரை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்து சில மணி நேரங்களில்தான் அவரது மரணச் செய்தி அறிவிக்கப்பட்டது.

1970 முதல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் தன்னை இணைத்துக்கொண்டு தனது இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொண்ட அவர், அவ்வியக்கத்தோடு இணைந்து பல்வேறு சமய, சமூக சீர்த்திருத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார். ஜமாஅத்தே இஸ்லாமியின் மேற்குப் பிராந்தியப் பொறுப்பாளராக, கம்பஹா உப பிராந்தியப் பொறுப்பாளராக திஹாரிய மன்றப் பொறுப்பாளராக மிக நீண்ட காலங்கள் தன்னார்வத்தோடு ஈடுபட்டவர்.

ஜமாஅத்தின் பிராந்திய, தேசிய மட்ட நிகழ்வுகளில் நேரத்திற்கு சமூகமளித்து, முன்வரிசையில் இருந்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறும் கடமையுணர்வுமிக்க ஓர் ஊழியராக அவர் இருந்துள்ளார்.

அல்லாஹ், அவரது அனைத்து செயல்களையும் அங்கீகரித்து அவற்றுக்கு மிக நிரப்பமான கூலியை வழங்குவானாக. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தவர்களுக்கு ஆறுதலையளிப்பானாக என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...