(File Photo)
பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களை துன்புறுத்தியதாக பல வழக்குகள் பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றை துன்புறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பில் கிரிபத்கொட மற்றும் களனி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மற்றுமொரு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.