நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்கள் என்ற ரீதியில் தமது சொந்த முயற்சியுடன் எழுந்து நிற்க வேண்டும் எனவும், அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதே திரு.லலித் அத்துலத்முதலியின் யோசனை என தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் இலங்கையில் லலித் அத்துலத்முதலி என்ற பெயரில் கற்கைநெறிகளை கற்கக்கூடிய பல்கலைக்கழகமொன்று நிறுவப்படும் என அவர் தெரிவித்தார்.