2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற மாணவரொருவரை தீயிட்டு எரித்ததில் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி அம்பிட்டிய, மீகனுவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சனிக்கிழமை (நவம்பர் 26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
குறித்த மாணவனின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் நடமாட்டம் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.