கடந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் 150 கோடி அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்ட முடிந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழிலாக மாற்றுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அரச மற்றும் தனியார் துறைகளில் சுமார் 20,000 பணியிடங்கள் வெற்றிடமாகவுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தொழில்துறைக்குத் தேவையான இளைஞர்களை சீரமைப்பது தமது அமைச்சின் பொறுப்பாகும் என்றார்.
ஒட்டுமொத்த டிஜிட்டல் கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ள 50,000 பேர் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றார்.
அடுத்த வருடம் 34,000 இளைஞர்களை இத்துறைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.