லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரித்த நிலையில் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் தமது நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாவாக அதிகரித்துள்ளது.
5 கிலோகிராம் வகை எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதே சிலிண்டரின் புதிய விலை 1,904 ரூபாவாகும்.
2 கிலோ 3 தசம வகை எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாயாக அதிகரித்துள்ளது.