எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமை, மற்றும் தேர்தலை நடத்துவதற்கு காணப்படுகின்ற தடைகள் குறித்து உயர்நீதிமன்றத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் மனுவொன்றின் ஊடாக தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச அச்சகத் திணைக்களத்தினால் அச்சிடும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றமை, பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படாமை, அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களையும் உயர்நீதிமன்றத்திற்கு தெளிவூட்டவுள்ளதாக நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்தில் உறுதி வழங்கியுள்ள போதிலும், அதனை உரிய வகையில் நடத்த முடியாதுள்ளமை தொடர்பில் ஆணைக்குழு என்ற வகையில் விளக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.