பலஸ்தீனில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தாம் தெளிவாக அறிந்திருப்பதாக அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவரும் இராஜதந்திரிகளின் பிரதானியுமான கலாநிதி ஸூஹைர் எம்.எச். தார் ஸைத் அவர்கள் நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் கலாநிதி வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான அவர்களையும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான அவர்களையும் கண்டியில் சந்தித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பலஸ்தீனுக்கும் இலங்கைக்குமான உறவை வெகுவாகச் சிலாகித்துப் பேசிய அவர்கள், பலஸ்தீனுக்கான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன் பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கும் பலஸ்தீன மக்களின் ஸ்திரமான வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கும் தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் தூதுவரிடம் தெரிவித்தனர்.
மகாநாயக்க தேரர்களிடம் பலஸ்தீன் தூதுவர் கருத்து வெளியிடும் போது மிகவும் கிட்டிய காலத்தில் இலங்கை தற்போதைய நிலையிலிருந்து வேகமாக மீளும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
இக்கட்டான காலகட்டத்தில் பலஸ்தீனும் பலஸ்தீன மக்களும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகத் தெரிவித்த தூதுவர் அவர்கள், இலங்கை ஒற்றுமையான ஒரு நாடு என்ற வகையில் ஒரே சமூகமாக நின்று முழுப் பலத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனவும் நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு வெளிப்புறத் தலையீடுகள் இன்றி முழுமையான உள்ளகப் பொறிமுறைகள் மூலமாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான வலுவான உறவை நினைவுகூர்ந்த தூதுவர் அவர்கள், பாலஸ்தீனத்துக்கு இலங்கையும் அதன் அனைத்து சமூகங்களும் அளித்து வரும் நீண்டகால ஆதரவுக்கு பலஸ்தீன மக்களின் நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமான நீண்ட வரலாறு கொண்ட உறவு என்றும் நிலைத்திருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திரத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற ஜனரஜ பெரஹராவில் கலந்து கொண்ட பின்னர் பலஸ்தீனத் தூதுவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்.