அபாயா அணிந்து வந்த ஆசிரியையே அதிபரைத் தாக்கினார்: ஸ்ரீ ஷண்முகா வழக்கில் ஆஜரான சுமந்திரன்

Date:

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்  ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம்  குறித்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ்  ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான்  பயஸ் றஸ்ஸாக் முன்னிலையில் விளக்கத்திற்கு ஏலவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான அப்துல் சுபையிர், சட்டத்தரணி றதீப் அகமட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

எதிர்த்தரப்பில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனோடு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸை பதவி ஏற்க விடாமல் தடுத்த அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தன்னுடைய சமர்ப்பணத்தில் இவ்வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட ஒரு வழக்கென்றும் அதிபரைத்தான் பஹ்மிதா றமீஸ் அவர்கள் தாக்கினார்களே ஒழிய அதிபரால் பஹ்மிதா றமீஸுக்கு எந்த பங்கமும் விளைவிக்கப்படவில்லை என்றும் இவ்வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் கனதியான நட்டஈடுகளை செலுத்த வேண்டி நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி றதீப் அகமட் அவர்கள், இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவினை அணிந்து செல்ல அனுமதிக்காமையானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் இவ்வாறான இன ரீதியான குற்ற அணுக்கங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அவகாசம் ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2018 ஏப்ரலில் பாடசாலைக்கு அபாயா அணிந்து கடமைக்கு வந்தமைக்காக ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தானும் தாக்கப்பட்டதாகக் கூறி பாடசாலை அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்துப் பாடசாலையில் அபாயா அணிந்து வர முடியாது என பாடசாலை நிர்வாகமும் பெற்றோர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தின் போதே குறித்த ஆசிரியை தாக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனது ஆடை உரிமை தொடர்பில் ஆசிரியை பஹ்மிதாவினால் 2018 மே 21 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழு தமது தெரிவுக்கேற்ற ஆடை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என 2019 பெப்ரவரி 02 இல் பரிந்துரைத்திருந்தது. இருந்த போதும் இன்று வரை அவருக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையிலேயே சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் அதிபர் இந்த ஆசிரியரால் தாக்கப்பட்டதாக வழக்கை வேறு கோணத்தில் அணுகியிருந்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...