ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் விஜயமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆயுத விநியோகம், பொருளாதார ஆதரவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டம் ஒன்றை சீனா அண்மையில் வெளியிட்டது.
மேலும், இந்த அமைதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார்.
இந்த பயணத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினை ஜின்பிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜின்பிங் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்றார்.
அரச முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த புமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சில மணி நேரங்களுக்கு பின்னர் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
விமானம் மூலம் போலந்து சென்றடைந்த அவர், ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு அவரை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
தொடர்ந்து இருவரும் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி அளித்துள்ளார்.
ஜப்பான் உக்ரைனுக்கு இதுவரை 7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.57 ஆயிரம் கோடி) மதிப்பிலான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.