கொந்தளிப்பும் குழப்பமும் மிக்க மத்திய கிழக்கின் அரசியல் பின்னணியில் மிகவும்
வியக்கத்தக்க ஒரு முன்னேற்றமாக சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும்
இடையிலான ராஜதந்திர உறவுகளின் மீள் ஆரம்பம் அமைந்துள்ளது.
சவூதி அரேபியா ஈரானுக்கு எதிராக திடசங்கற்பம் பூண்டுள்ள அமெரிக்காவினதும்
இஸ்ரேலினதும் மத்திய கிழக்கின் பிரதான பங்காளி நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஈரானுடன் ராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இரண்டு மாதங்களுக்கு இடையில் இரு நாடுகளும் தத்தமது நாடுகளில் தூதரகங்களை மீண்டும் ஸ்தாபிக்கும் என்றும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் துண்டிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள்
கழிந்துள்ள நிலையில் சீனாவின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த உறவுகள் மீண்டும்
கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
இருந்தாலும் சக்தி மிக்க இந்த இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான
சந்தேகங்களும் வெறுப்புக்களும் மிகவும் ஆழமானவையும் சிக்கலானதும் ஆகும்.
எனவே இந்த உறவுகளுக்கான உடன்பாட்டின் உண்மையான முடிவை தெரிந்து
கொள்ள சற்று காத்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
சவூதி அரேபியா இஸ்லாத்தின் தேசம், ஈரான் ஷீஆ பிரிவின் தலைமைத்துவ நாடு.
இது பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் வேறுபாடு.
ஆனால் இந்த இரு நாடுகளும் ஒரு காலத்தில் அமெரிக்காவின் நண்பர்களாக இருந்த போது இந்த வேறுபாடு ஒரு பொருட்டாகவே அமையவில்லை.
ஆனால் 1979ல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி வெற்றிகண்டதும்
இந்த நிலைமை இரவோடு இரவாக மாறத் தொடங்கியது.
இஸ்லாமியப் புரட்சி மூலம் ஈரானில் பதவி கவிழ்க்கப்பட்ட மன்னர் ஷா பஹ்லவிக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன வழங்கிய ஆதரவுக்காக ஈரான் இந்த நாடுகளை வன்மையாகக் கணடிக்கத் தொடங்கியதோடு விமர்சனமும் செய்ததே இதற்கு முக்கிய காரணம்.
மன்னர் ஷா அடக்குமுறைக்கும் ஊழலுக்கும் பேர்போன ஒரு மன்னராகத் திகழ்ந்தார். அது மட்டும் அன்றி தனது நாட்டு செல்வங்களை தாராளமாக சூறையாட அவர் அமெரிக்காவுககு பூரண ஒத்துழைப்பையும் வழங்கினார்.
இஸ்ரேலும் அதன் ஐரோப்பிய ஆதரவாளர்களும் இஸ்லாம் மீண்டும் ஒரு சக்தியாக
எங்கும் தலைதூக்குவதை அனுமதிக்கப் போவதில்லை.
1948ல் பலஸ்தீன பூமியில் தனது நாட்டை சட்டவிரோதமாக ஸ்தாபித்துக் கொண்டது முதல் அவர்கள் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளனர். காரணம் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் தான் யூத சக்திகளை கிட்டதட்ட தோல்வியின் முனைக்கு கொண்டு வந்த பிரதான சக்தியாக அன்று காணப்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய எகிப்தின் சர்வாதிகார மன்னர் பாருக் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை தொடர்ந்து போரிட முடியாதவாறு தடுத்து நிறுத்தினார்.
ஈரானில் இஸ்லாமிய புரட்சி மலர்ந்த கையோடு அமெரிக்கா தலைமையிலான
மேற்குலகும் இஸ்ரேலும் சவூதி அரேபியாவைப் பயன்படுத்தி ஈரானின் அண்டை
நாடான ஈராக்கின் மற்றொரு சர்வாதிகார ஆட்சியாளராகத் திகழ்ந்த சதாம்
ஹுசேனைத் தூண்டி விட்டு ஈரான் மீது போர் தொடுக்க வைத்தனர். இந்த யுத்தம்
சுமார் எட்டு வருடங்கள் நீடித்து இரு நாடுகளையும் நாசமாக்கியது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 800 பில்லியன் டொலர்கள் இந்த யுத்தத்துக்காக செலவழிக்கப்பட்டன.
அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன இந்த யுத்தத்தின் மூலமான ஆயுத விற்பனையால் பெரும் இலாபம் ஈட்டின.
அன்று முதல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றின்
பூரண ஆதரவைப் பெற்ற சவூதி அரேபியா மற்றும் வளைகுடா பிராந்திய நாடுகள்
என்பனவற்றுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்ற நிலை மேலோங்கியது.
அடுத்தடுத்து ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை நசுக்கியது. அதனால் அந்த நாட்டு மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு துன்பத்தை இன்றுவரை அனுபவிக்கின்றனர்.
சவூதிக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக சவூதி
அரேபியா தனது இருப்புக்காக அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் ஆதரவில்
முழுமையாக தங்கியிருக்கம் நிலை உருவானது.
அமெரிக்காவின் ஆதரவின்றி சவூதி அரேபியாவால் இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறுமளவுக்கு சவூதியின் நிலை மோசமானது.
இடமிருந்து வலம் சவூதி அரேபியாவின் தேசிய பாதகாப்பு ஆலோசகர் முஸாத்
பின் மொஹமட் அல் அய்பான் சீனாவின் வாங் வி ஈரானின் அதி உயர் தேசிய
பாதுகாப்பு சபையின் அலி ஷம்கானி ஆகியோர் 2023 மார்ச் 10ல் பீஜிங்கில்
இடம்பெற்ற ஒர கூட்டத்தில் பங்கேற்ற வேளையில் எடுக்கப்பட்ட படம் :
படஉதவி ராய்ட்டர்ஸ் இந்த நிலைமையத் தொடர்ந்து இடம்பெற்ற செயற்பாடுகளின் போது சவூதியும் வளைகுடா ஷேக்மாரும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்திய அனைத்து சதிகளினதும்,
தொடுக்கப்பட்ட எல்லா யுத்தங்களினதும் தொடர் பங்காளிகளாக மாறினர்.
உதாரணத்துக்கு 2011 அரபு வசன்த போராட்டங்களின் போது அன்றைய எகிப்திய
ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டார்.
அதன் விளைவாக அங்கு சுமார் 60 வருடங்களின் பின் இடம்பெற்ற முதலாவது நீதியான சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு சார்பான மொஹமட் முர்ஷி மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவானார்.
இந்தத் தெரிவு மேலைத்தேச நாடுகளினது தலைநகரங்களிலும் இஸ்ரேலிலும்
எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. மீண்டும் அமெரிக்கா தலைமையிலான
மேற்குலகும் இஸ்ரேலும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம்
என்பனவற்றை இணைத்துக் கொண்டு சுமார் 11 பில்லியன் அமெரிக்க
டொலர்களை செலவிட்டு எகிப்தில் செயற்கையான உணவுத் தட்டுப்பாடு,
எரிபொருள் தட்டுப்பாடு என்பனவற்றை உருவாக்கி அங்கு அமைதியீனத்தை
ஏற்படுத்தின.
இதன் விளைவு நீண்ட காலத்துக்குப் பின் மக்களின் விருப்பத்தின் பேரில் எகிப்தில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஷி சதிப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக தமக்கு மிகவும் விருப்பமான இராணுவ அதிகாரி அப்துல் பத்தாஹ் அல் சிசி மேற்குலக சக்திகளால் பதவியில் அமர்த்தப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ் அந்த பண்டைய பெருமை மிக்க நாடு இன்று ஒரு திறந்த வெளி சிறைச்சாலை ஆக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கு எதிரானவர்கள் பள்ளிவாசல்களில் வைத்துக் கூட
பலியிடப்பட்டனர். ஆனால் ஜனநாயத்தினதும், மனித உரிமைகளினதும்
சுதந்திரத்தினதும் காவலர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் மேற்குலக
தலைநகரங்களில் சிசிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் யெமனில் ஈரானுக்கு எதிரான ஒரு
பிணாமி யுத்தத்தில் ஈடுபட்டன.
இன்றும் அது தொடருகின்றது. இதனால் ஏற்கனவே வறுமை நிலையில் இருந்த யெமன் இன்று ஒரு கொலைகளமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மனித வரலாற்றில் என்றும் இல்லாத ஒரு மனிதப் பேரவலம் இன்று அங்கு எற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட, கொடுமைகளுக்கு
ஆளாக்கப்பட்ட தமக்கு உதவ யாரும் அற்ற, தமக்காக குரல் எழுப்ப எவரும் அற்ற
மக்கள் பெரும் திகைப்புடன் அமைதியாக இவற்றை அவதானித்து வந்தனர்.
ஈராக் சிரியா லிபியா ஆகிய எண்ணெய் வளம் மிக்க நாடுகள் எவ்வாறு
நாசமாக்கப்பட்டன.
அந்த நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட விதம், அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட விதம், அவர்கள் இன்று வறுமையிலும் பட்டினியிலும் வாடும் நிலை என்பனவற்றை இந்த மக்கள் வேறு வழியின்றி அமைதியாக சகித்துக் கொண்டு வாழுகின்றனர்.
இந்த அழிவுகளில் சவூதி அரேபியாவும் ஏனைய வளைகுடா நாடுகளும் ஏற்ற பங்கு
எத்தகையது என்பதையும் அந்த மக்கள் வியப்புடன் அவதானித்தவர்களாகவே
உள்ளனர். அதனால் தான் அரபு வசன்த புரட்சி காலத்தைப் போல் மீணடும் ஒரு
எரிமலை அந்தப் பிராந்தியத்திரல் வெடிக்கும் சாத்தியம் உண்டு என்று பலர்
இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதான
உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளமையானது முழு மத்திய கிழக்கிலும்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலைமையில் தான் சீனா மத்திய கிழக்கில் பிரதான பாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளது. இதனால் இனிமேல் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு ஏகபோகம் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலும் பாரிய நட்டத்தை எதிர் கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் சவூதி அரேபியா மேற்குலகின் தயவின்றி சுதந்திரமானதோர் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற
நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதை எந்தளவுக்கு அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்கள் அனுமதிப்பார்கள் என்பதும் கேள்விக்குரியதே.
காரணம் அவர்கள் மிகப் பிரதானமானதோர் தளத்தை இழக்கப் போகின்றார்கள். என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டி உள்ளது.
ஒரு சாதாரண பழங்குடி ஆட்சியாளரான அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூத்
முன்னர் நஜத் என அழைக்கப்பட்ட றியாத்தில் 1744ல் தனது ஆட்சியை
நிறுவினார்.
முதலாவது உலக மகா யுத்தத்தின் முடிவுக்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ யூத சக்திகளும் பலஸ்தீன பூமியை சூறையாடி இஸ்ரேல் என்ற நாட்டை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் இறங்கினர்.
இவர்கள் அல் சவூத்துக்கு பெருமளவு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி
அன்று ஹிஜாஸ் மாநிலமாக இருந்த மக்கா மற்றும் மதீனா என்பனவற்றை
உள்ளடக்கிய பிராந்தியத்தின் ஆட்சியாளராகவும் இஸ்ரேலின் உருவாக்கத்தை
மிகக் கடுமையாக எதிர்த்தவருமான ஷரீப் ஹுஸேன் மீது தாக்குதல் தொடுக்க
வைத்தனர். இந்தத் தாக்குதலில் அவர் பதவி கவிழ்க்கப்பட்டார்.
1925 டிசம்பரில் இப்னு சவூத் ஜெத்தாவைக் கைப்பற்றினார். இதன் மூலம் சுமார்
1400 வருடங்களுக்கு மேலாக இஸ்லாத்தின் இறைதூதர் நபி முஹம்மத் (ஸல்)
அவர்களின் வழிவந்தோரால் ஆழப்பட்டு வந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.
1926 பெப்ரவரியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு இப்னு சவூதை ஹிஜாஸின் மன்னராக உத்திகோப்பூர்வமாக அறிவித்தது.
ஏனைய ஐரோப்பிய சக்திகளும் அதைப் பின்பற்றி ஓரிரு வாரங்களில் அவரை மன்னராக ஏற்றுக் கொண்டன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒன்றிணைக்கப்பட்ட இந்த வஹ்ஹாபி தேசத்தை 1932ல் ‘சவூதிஅரேபிய ராஜ்ஜியம்’ என்று புதிய முத்திரை குத்தியது. இதனிடையே சவூதியின் அமெரிக்க உறவுகள் 1945இன் காதலர் தினத்தில் தொடங்கப்பட்டது.
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்லின் டி ரூஸ்வெல்ட் மன்னர் இப்னு சவூதை சுயஸ் கால்வாயில் தரித்திருந்த அமெரிக்காவின் ஆடம்பரக் கப்பலான யு.எஸ்.எஸ் குயின்ஸியில் சந்தித்தார். சவூதியின் பாதுகாப்பை அமெரிக்கா முழுமையாக உறுதி செய்யும்.
அதற்கு பதிலாக சவூதி அமெரிக்காவுக்கு தங்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டும். இது தான் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதலர் தின ஒப்பந்தம்.
இவ்வாறு தான் அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையிலான நட்பு மிக
ஆழமானதாகவும் காணப்பட்டது.
இதனால் சுதந்திரமான ஒரு வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவது சவூதிக்கு எப்போதும் சிக்கலானதாகவே இருந்தது.
இந்நிலையில் ஒரு சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற சவூதிக்கு யுத்த வெறியர்கள் அனுமதி அளிப்பார்களா என்பதே மீண்டும் எழுகின்ற கேள்வியாகும்.
சவூதி – ஈரான் உடன்படிக்கையை பல வளைகுடா நாடுகள் வரவேற்றுள்ளமையானது இந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை தணிவதற்கான ஒரு அறிகுறியாக நோக்கப்படுகின்றது.
ஆனால் இந்த உடன்படிக்கையை அமுல் செய்வது அவ்வளவு இலேசான காரியமும் அல்ல. அதற்காக இரு நாடுகளும் பல விடயங்களை விட்டுக் கொடுத்து அமுல் செய்ய வேண்டி உள்ளது.
யெமன், சிரியா, ஈராக், லெபனான் மற்றும் அதற்கு அப்பாலும் ஈரான் பிணாமி யுத்தங்களில் ஈடுபட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.