தமிழ், முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்திற்காக அயராது பாடுபட்ட கிண்ணியா எம்.ஈ.எச். முகமது அலி!

Date:

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ.எச். முகமது அலி.

இலங்கை பாராளுமன்றத்தில் முதன் முதல் தமிழ் மொழியில் உரையாற்றிய பெருமை இவரே சாரும். 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனி சிங்களம் மட்டும் என்ற சட்டத்துக்கு எதிராக தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்தவர்.

நேற்று (27)  அவரது 95 ஆவது பிறந்த தினம் ஆகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.ஈ.எச். முகமது அலியின் ஞாபகார்த்த பேருரையும் துவா பிரார்த்தனையும் (25) கிண்ணியா காதிரிய்யா தக்கியா நிறுவகத்தில் நடைபெற்றது.

கிண்ணியா கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அதன் தலைவரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருமான ஏ.சி.எம். முஸ்இல் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய ஏ.சி.எம். முஸ்இல்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக 1952 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் மூதூர் தொகுதியில் சுயேச்சை குழு சார்பாக போட்டியிட்ட இவர், 6050 வாக்குகளை பெற்று தனது 25 வது வயதில் பாராளுமன்ற உறுப்பினராகத் செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தில் கடந்த காலங்களில் தமிழ் மொழியில் யாரும் உரையாற்றி இருக்கவில்லை சிறுபான்மை உறுப்பினர்கள் ஆங்கில மொழியிலே உரையாற்றி இருந்தனர். இதனால் கன்சாட்டில் தமிழ் மொழி உரை இடம் பெற்றிருக்கவில்லை.

இந்தக் குறை நிவர்த்திக்கப்பட வேண்டும். தனது தாய் மொழியாம் தமிழ் சிறப்பு பெற வேண்டும். கன்சாட்டில் அந்த மொழி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சபாநாயகரின் அனுமதியுடன், ஆங்கில மொழியில் புலமை பட்டிருந்த இவர்,1952.07.25 இல் பாராளுமன்றத்தில் தனது கண்ணி உரையை தமிழ் மொழியில் நிகழ்த்தினார். இந்த வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் முதன் முதல் தமிழ் மொழியில் உரையாற்றிய பெருமை இவரே சாரும்.

1956 ஆம் ஆண்டு தனி சிங்களம் மட்டும் என்ற சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். இதற்காக தமது பதவியை இராஜினாமா செய்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர் ஆவார்

இவருடைய 16 வருட கால பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் மூதூர் தொகுதியில் மூன்று இனங்களுக்கும் சம அளவில் தனது சேவையை செய்துள்ளார்.

இதற்கு சிறந்த உதாரணங்களாக கிண்ணியா மத்திய கல்லூரி வட்டக்கச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, பாலத்தோப்பூர் பாடசாலை, அல்லை நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, சேனையூர் மிஷனரி தமிழ் கலவன் பாடசாலை, சீனக்குடா அரசினர் சிங்கள கலவன் பாடசாலை,கேணிக்காடு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, அக்கரைச்சேனை அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலை என பல பாடசாலைகளை கூறலாம்.

அன்றிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை பதினாறு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூராவின் தலைவரும் மூதூர் வலயக் கல்வி அலுவலக முன்னாள் பிரதிக் கல்வி பணிப்பாளருமான ஏ. ஆர். எம். பரீட் உரையாற்றும்போது,

1947 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பாராளுமன்ற தேர்தலில் தனது 20 வது வயதில் போட்டியிட்டார். இதன் மூலம் ஆகக் குறைந்த வயதில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெருமை இவரே சாரும்.

வெள்ளிக்கிழமை ஜும்மா நேரங்களில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்.

சமூகப்பற்றும் துணிச்சலுமிக்க இவர் முஸ்லிம் மக்களுக்கு என தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே முஸ்லிம்களின் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்க முடியும் என்ற பிரேரணையை 1967-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூராவின் செயலாளரும் முன்னாள் நீதிமன்ற பதிவாளருமான எம். எஸ். நியாஸ் கருத்து தெரிவிக்கும் போது,

ஆங்கிலேயர் ஆட்சியில் இடம்பெற்ற துருக்கித் தொப்பி விவகாரம் இலங்கை முஸ்லிம்களை கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஒரு பேரணியாகத் திரண்டு, துருக்கி தொப்பிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தது. இந்த பேரணியில் முகமது அலி ஒரு பிரதான பாத்திரத்தை வகித்ததாக வரலாறு கூறுகின்றது.

மூதூர் தொகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்திற்காக அயராது பாடுபட்ட ஒருவர். இதன் காரணமாக 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு முதலாவது எம்பியாக தெரிவு செய்யப்பட்டார்.

1970 இல் சேருவில தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்னர், மூதூர் தொகுதியின் கீழ் இருந்த கந்தளாய், சேருவில, சீனக்குடா போன்ற தமிழ் சிங்கள பிரதேசங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பட்ட சேவைகளை செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

27.03.1927 ஆண்டு பெரிய கிண்ணியாவில் எகுத்தார் ஹாஜியார் மற்றும் இமாம் பீவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர்.

1932 ல் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். 1937-ல் திருகோணமலை இந்து கல்லூரியில் சேர்ந்து இடைநிலைக் கல்வியை கற்றார்.

1941-ல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் உயர்தர கல்வியை கற்ற இவர், 1943 இல் கொழும்பு ஜுனானி வைத்திய கல்லூரியில் கற்று யூனானி வைத்தியர் ஆனார்.

பதினாறு வருட காலம் மூதுர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து. பல்வேறு பணிகள் செய்த மர்ஹும் எம்.ஈ.எச். முகமது அலி 31.12.2004 இல் காலமானார்.

இதேவேளை அவரது  95 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இங்கு விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...