புத்தளத்தைச் சேர்ந்த சிங்கள சமூக செயற்பாட்டாளர்களில் சிலர், நல்லிணக்க அடிப்படையில் புத்தளம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் பெரியபள்ளிவாசலுக்கு வருகைத் தந்து இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2022 ஆம் வருடம் புத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ பகுதியைச் சேர்ந்த இவர்கள் ஒருவரையொருவர் இந்தநிகழ்வில் அறிமுகம் செய்துகொண்டனர்.
இதன்போது, புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வரலாறு மற்றும் கண்டி இராசதானியின் மன்னன் ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க அன்பளிப்பு செய்த அரச சின்னங்களையும் பல்வேறு அளவுகளிலான குர்ஆன் பிரதிகளையும் பார்வையிட்டனர்.
ரமழான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது முதல் குர்ஆனின் சிறப்பம்சங்கள் பற்றிய (சுருக்கமான) தகவல்களுடன் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மூன்று இளம் ஹாபிழ்களினால் மூன்று வித்தியாசமான முறைகளில் குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டதை வெகுவாக இரசித்தனர்.
மேலும், இப்தாருக்குரிய நேரத்தில் வழமையாக பள்ளிவாசலுக்கு வரும் முஸ்லிம்ளுடன் அமர்ந்து நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் விதத்தையும் பார்வையிட்டதுடன் இறுதியாக முஸ்லிம் சகோதரர்களுடன் அன்பைப் பரிமாறிக்கொண்டு இந்நிகழ்வை மனம் நிறைந்த நன்றிகளுடன் நிறைவு செய்தனர்.
மூன்று பெண்களும் ஒன்பது ஆண்களும் கொண்ட இந்த சமூக செயற்பாட்டாளர்கள் முதன்முறையாக பள்ளிவாசலொன்றுக்குள் வருகை தரும் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை இந்த குழுவினர்களில் ஆண்களுக்கு துணையாளர்களாக தேசிய மக்கள் சக்தி புத்தளம் நகர கிளையின் முஸ்லிம் செயற்பாட்டாளர்களும், பெண்களுக்காக புத்தளம் புனித அன்றூஸ் மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழிமூலம் கல்விகற்ற முஸ்லிம் சகோதரிகள் இரண்டு பேரும் பணியாற்றினர்.
இந்நிகழ்வுக்கான அனுமதியுடன் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிருவாகத்துக்கும் ஊழியர்களுக்கும் நிதியன்பளிப்பு (இப்தாருக்காக) வழங்கிய அன்பர்களுக்கும் பல்வேறு ஒத்துழைப்புக்களை நல்கிய அன்பர்கள் அனைவருக்கும் இந்நிகழ்வின் அமைப்பாளர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.