இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க, மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை IMF யூடியூப் சேனலில் இலங்கையின் மீட்சியை ஆதரிப்பது மற்றும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய பீட்டர் ப்ரூயர்,
பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உதவி செய்ய IMF உள்ளது. இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கையை ஆதரிப்பதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியம் அங்கீகரித்துள்ளது,” என்றார்.
நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், அரசாங்க வருவாயை உயர்த்துதல், விலைகளை நிலைப்படுத்துதல், வெளிநாட்டு இருப்புக்களை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் போன்ற சீர்திருத்தங்கள் உட்பட இலட்சிய பொருளாதார மீட்பு திட்டத்தை இலங்கை அதிகாரிகள் ஒன்றிணைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.