பிரபல அரசியல்வாதி அதிக் அகமது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை: உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

Date:

உத்தர பிரதேச , முன்னாள் பிரபல அரசியல்வாதி அத்திக் அகமது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அத்திக் அகமது. சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பு வகித்துள்ள இவர், 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

பிரபல ரவுடியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த அத்திக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு, இருவரும் நீதிமன்றத்தில் இருந்து பிரயாக் ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் அத்திக் அகமதுவிடம் பேட்டி எடுக்க முயன்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டே இருவரும் சென்றபோது, கூட்டத்தில் நின்றிருந்த நபர்கள், அத்திக் அகமதுவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

அடுத்தடுத்து துப்பாக்கிக் குண்டுகள் உடலைத் துளைக்க, ரத்த வெள்ளத்தில் சரிந்த அத்திக் அகமதுவும், அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதே போன்று, பிரயாக் ராஜ் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அத்திக் அகமதுவை சுட்டுக்கொன்ற 3 பேரும், அங்கிருந்த காவல்துறையினரிடம் உடனடியாக சரண் அடைந்தனர்.

லேவ்லீன் திவாரி (Lavleen Tiwari), அருண் மற்றும் சன்னி  ஆகிய அந்த 3 பேரைப் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.

பல நாட்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தப்பட்ட படுகொலை என தெரிவித்துள்ள பொலிஸார், குற்றவாளிகள் மூவரும் பத்திரிகையாளர்களைப் போல் கூட்டத்தில் நுழைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கென பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும், மைக், கேமராக்களுடன் நுழைந்து, அத்திக் அகமதுவை நெருங்கி, மிக அருகில் இருந்து, துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது.

மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு  “ஜெய் ஸ்ரீ ராம்” அல்லது “ஹேல் லார்ட் ராம்” என்று முழக்கமிட்டனர்.  இது முஸ்லிம்களுக்கு எதிரான  பிரச்சாரத்தில் இந்து தேசியவாதிகளுக்கு போர் முழக்கமாக மாறியுள்ளது.

பலியான இருவரும் இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம்களை சேர்ந்தவர்கள். இந்தக் கொலைகளில் மதவெறிக் காரணத்தை விசாரிக்கிறதா என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில், இந்த கொலை சம்பவம், காவல்துறை மீதும், மாநில அரசின் மீதும் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

மருத்துவ பரிசோதனை செய்ய அத்திக் அகமதுவை இரவு நேரத்தில் அழைத்துச் சென்றது ஏன்?… அவருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியாக இருந்தது ஏன் என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உத்தரப் பிரதேசத்தில் குற்றச் செயல்கள் உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் நபரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாமான்ய மக்களின் கதி என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...