சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர் கட்டடத் திட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhongனால் இந்த கட்டடம் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று (25) கையளிக்கப்பட்டுள்ளது.
80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் சுமார் 50,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
இந்த திட்டமானது தினசரி 6,000 வெளிநோயாளிகளுக்கு வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மருத்துவ இடர்பாடுகளை போக்க பெரிதும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிநோயாளர் கட்டடமானது நாட்டின் சுகாதாரத் துறைக்கு உண்மையில் தேவைப்படும் திட்டமாகும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன தூதுவர் இது குறித்து தெரிவிக்கையில், சீன அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதனால் இருதரப்பு உறவுகளும் வலுப்பெறும்.
கோவிட் தொற்றுநோய்களின் போது சீனா இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியிருந்தது. சீனாவின் முயற்சிகள் முன்னணி மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறுதியான நன்மைகளை கொண்டு வர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து சீன தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த வருடத்தில் சீனாவினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான ஒப்படைப்பு ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.