மே தினம் உழைப்பாளிகளின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் உன்னத தினமாகும். சாதி, மத, இன, மொழி, பிரதேச, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் முழு மனித குலமும் கொண்டாடும் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்து என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு இன்று (01) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் மனித வரலாற்றில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக மாத்திரமன்றி சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடியுள்ளார்கள்.
உலகத்தில் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளோடும் ஒன்றிணைந்து உழைத்தவர்களில் அதிகமானவர்கள் தொழிலாளர்களே. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யப் புரட்சிகளும் கியூபா, வியட்னாமின் விடுதலைப் போராட்டங்களும் உழைப்பாளர்களின் தியாகத்தின் பெறுபேறுகளாகும்.
இன்று நாம் எதிர்நோக்கியுள்ள வறுமை வேலையின்மை விலைவாசி உயர்வு போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டு வரும் பாரிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் இன முரண்பாடுகள், கல்லாமை, இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குமான தீர்வும் உழைக்கும் வர்க்கத்தினர்களின் சாத்வீகமான போராட்டத்தின் மூலமாகவே சாத்தியமாகும்.
மே தினத்தை கொண்டாடும் இன் நன்னாளில் உழைப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எமது இதயம் கனிந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.