துருக்கி தூதுவரின் வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு பிறகு, சூடானின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu சனிக்கிழமை அறிவித்தார்.
“எங்கள் தூதரகம் மற்றும் எங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, நாங்கள் எங்கள் தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்தோம், என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கி தூதுவர் இஸ்மாயில் கோபனோக்லு சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) ஆகிய இருவருடனும் இந்த பிரச்சினையை விவாதித்து, இடமாற்றத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்ததாக துருக்கி அமைச்சர் மேலும் கூறினார்.
சனிக்கிழமையன்று சூடானுக்கான துருக்கி தூதுவரின் உத்தியோகபூர்வ வாகனம் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் வாகனம் சேதமடைந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தாக்குதல் நடந்த பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய RSF, நாட்டில் உள்ள தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.