ஆப்கானிஸ்தான் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், மக்களாட்சி அங்கு நடந்து வந்தது.
அமெரிக்கப் படைகள் கடந்த 2021இல் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது.
தாலிபான்கள் ஆட்சியில் மீண்டும் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை அப்படியே நிறுத்திவிட்டன.
இதன் காரணமாக இப்போது பொருளாதார ரீதியில் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது. உலக நாடுகளின் முதலீடு தேவை என்ற நிலையே அங்கு உருவாகியுள்ளது.
பாகிஸ்தானுடன் இணைந்து சீனா பெல்ட் அண்ட் ரோடு முயற்சியை எடுத்துள்ள நிலையில், அதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் அவர்களுக்குப் பெரியளவில் உதவும்.
இஸ்லாமாபாத் சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியை சந்தித்தார்.
அப்போது ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு உதவும் வகையில், 60 பில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன் பிறகு இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடரவும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி ஜின்பிங் அரசு அங்கே பெல்ட் அண்ட் ரோடு முயற்சியை எடுத்தது. இருப்பினும், அப்போது அங்கு இருந்த ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டியதால் இந்தத் திட்டம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது அங்கே கடும் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், சீன திட்டத்திற்குத் தாலிபான்கள் உடனடியாக அனுமதியளித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது ஆப்கானிஸ்தான் தூதரும் உடன் இருந்தார். சீனாவின் முதலீடு என்பது ஆப்கானிஸ்தான் நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்தச் சூழலில் இப்போது ஆப்கானிஸ்தானுடன் சீனா கைகோர்த்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.