`தி கேரளா ஸ்டோரி’படத்துக்கு பிரதமர் மோடி கொடுத்த பதிலும், எழுந்துள்ள சர்ச்சையும்!

Date:

பிரதமர் மோடி `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

“இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது” என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளும், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பது மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை விபுல் ஷா தயாரிக்க, மேற்கு வங்க இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல’ காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், படத்தின் டீசர் வெளியானபோதே கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.

குறிப்பாக, `உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்ற பெயரில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் 32,000 இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததுபோலவும், எதிர்காலத்தில் கேரள மாநிலமே இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும்’ என்பது போன்ற முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும் வசனங்களையும் காட்சியமைத்து, இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியிருப்பதாக கேரள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,

“தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியிருக்கிறது. சமூகத்தில் புரையோடும் ஒரு புதுவித பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது. அதில் தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கேரளா போன்ற அழகான மாநிலத்தில், பயங்கரவாதம் எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என அந்தத் திரைப்படம் பேசுகிறது.

ஆனால், காங்கிரஸ் அந்தப் படத்துக்குத் தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயல்கிறது. தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களைத் தாண்டி புதியமுகம் இருக்கிறது. அதை அந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது!” என `தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

“பிரதமர் மோடி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியிருப்பது சரியல்ல‌. குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான இந்தப் படத்தை பிரதமரே ஆதரித்துப் பேசுவது வேதனையாக இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் இது போன்ற சர்ச்சையான படங்களை வெளியிடுவது எவ்விதத்திலும் சரியாக இருக்காது. இது போன்ற படங்களை எடுக்கும்போதே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அதை விடுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் இத்தகைய படங்களை ஆதரிப்பது தவறு.

இதைத்தான் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் செய்துகொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதச் செயல்களைச் செய்துவருவதே பா.ஜ.க-தான்” என குற்றம்சாட்டியிருக்கிறார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...