பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை அமைப்புக்கு (என்.ஏ.பி) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை துணை இராணுவத்தினர் அதிரடியாக சுற்றி வளைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்.ஏ.பி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது.
அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியது.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையின்போது, தான் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கழிவறையை பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் தொடர்ந்து வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது பல நகரங்களுக்கும் பரவி வருகிறது. நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
அங்கு நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.