பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக விழிப்பாயிருங்கள்: மறைந்த சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீதின் இறுதி அறைகூவல்

Date:

(சட்டரீதியாகவும் அரசியல்யாப்பு ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் கை வைக்கப்படும் போதெல்லாம் அது தொடர்பில் சமூகத்துக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்த வகையில் மறைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட்  அவர்கள் இறுதியாக விடுத்த அறைகூவல்)

ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக (Prevention of Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( Anti-terrorism Act) என்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக அதற்கான சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதனை எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள் மற்றும் பல அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அது தமிழருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அப்போது நாட்டில் பயங்கரவாத யுத்தம் நடைபெற்றது.

அதன்பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வகை தொகையின்றி அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் பெரும்பான்மையோர் பேசவில்லை.

அதன்பின் நாட்டில் ஆட்சி மாற்றம் தொடர்பான போராட்டம் ஆட்சியை மாற்றிய பின்பும் அதாவது போராட்ட இலக்கை அடைந்த பின்பும் ஒவ்வொரு கட்சியினுடைய அல்லது அமைப்புகளினுடைய அரசியல் இலக்குகளை அடைவதற்காக வெவ்வேறு கோசங்களை எழுப்பிக் கொண்டு தொடர்ந்த போது அது இன்னுமொரு கோணத்தில் திரும்பியது.

அப்போதுதான் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள். இந்நிலையில் தான் இன்றைய சட்டமூலத்திற்கெதிராக பரவலான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

தற்போது இனவாதம் ஓய்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் எழாது என்று கூறமுடியாது. அவ்வாறான சூழலில் சிறுபான்மை, குறிப்பாக முஸ்லிம்கள் மீண்டும் இலக்காகலாம். இந்தப்பின்னணியில் சிறுபான்மைகள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் இச்சட்டமூலம் பற்றி ஓரளவாவது தெளிவடையச் வேண்டியது அவசியமாகும்.

இச்சட்டமூலம் பற்றி இன்று மேடைகளில் பேசப்படுவது சரியா? பிழையா? உண்மையா? பொய்யா? விம்பம் செயற்கையாக பெருப்பிக்கப்படுகிறதா? அல்லது அவர்கள் கூறுவதுதான் சரியான விம்பமா? என்பது தொடர்பாக நமக்கு ஓரளவாவது புரிதல் இருக்கவேண்டும்.

குறிப்பாக நம் அரசியல் வாதிகள், அதிலும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை ஆராயவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் ஆதரவாகவோ, எதிராகவோ கையுயர்த்தப் போகின்றவர்கள்.

பொதுவாக நமது நாட்டில் ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவென்றால் அனைத்து சட்டமூலங்களையும் ஆதரிப்பது. எதிரணியில் இருந்தால் அனைத்தையும் எதிர்ப்பது.

17 யும் ஆதரிப்போம், 18யும் ஆதரிப்போம், 19யும் ஆதரிப்போம், 20யும் ஆதரிப்போம், 21 யும் ஆதரிப்போம். 22 வந்தாலும் ஆதரிப்போம். அதாவது + யும் ஆதரிப்போம். அதன் – யும் ஆதரிப்போம்.

அது நாம் ஆளும் கட்சியில்இருக்கின்றோமா? எதிர்க்கட்சியில் இருக்கின்றோமா? என்பதைப் பொறுத்ததேயொழிய அச்சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை பொறுத்ததல்ல. அதன் சாதக, பாதகங்களைப் பொறுத்ததல்ல என்பது எழுதப்படாத எமது கொள்கை விதியாகும்.

சட்டமூலத்தையே வாசிக்காமல் அதன் உள்ளடக்கம் எப்படித்தெரியும்?

எனவே, தயவுசெய்து குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை வாசியுங்கள். பொதுவாக, ஒரு முக்கியமான சட்டமூலம் வரும்போது அதனை வாசித்துப் புரியமுடியாவிட்டால் அத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களுடனாவது அது தொடர்பாக கலந்தாலோசியுங்கள். அதன்பின் கையுயர்த்துங்கள்.

இத்தொடரில் ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் முக்கிய அம்சங்களும் தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களும் ஒப்பீட்டு ரீதியாக ஆராயப்படுகின்றன; இன்ஷா அல்லாஹ்.

வரைவிலக்கணம்

‘பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பொறுத்தவரை அது தொடர்பாக உலகில் ஒரு பொதுவான வரைவிலக்கணம் கிடையாது.

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான பிரச்சினைகள் காணப்படுவதால் அதனை ஒரு பொதுவான வரைவிலக்கணத்தின்கீழ் கொண்டுவர முடியவில்லை. இதனால் ஒவ்வொரு நாடும் தங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ‘பயங்கரவாதத்தை’ வரைவிலக்கணப் படுத்துகின்றன.

நமது ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்திலோ’ அல்லது கொண்டுவரப்பட இருக்கின்ற ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திலோ’ பயங்கரவாதம் என்றால் இதுதான் என்று ரத்தினச் சுருக்கமாக எந்த வரைவிலக்கணமும் தரப்படவில்லை.

மாறாக, இச்சட்டத்தில் அல்லது சட்டமூலத்தில் இவை, இவை குற்றங்களாக கருதப்படுகின்றன என்றுதான் தரப்பட்டிருக்கின்றது. எனவே, அவையெல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை “பயங்கரவாதமாகும் அல்லது பயங்கரவாத செயல்களாகும்”.

அதேபோன்று அவற்றிற்கான தண்டனைகள் எவை, அக்குற்றங்களில் ஒன்றையோ, பலவற்றையோ புரிந்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அவரை விசாரிப்பது எப்படி, வழக்குத் தாக்கல் செய்யமுன் அவ்விசாரணைக் காலத்தில் விளக்கமறியலில் வைப்பதா, பிணையில் விடுவிப்பதா, அல்லது தடுப்புக்காவலில் வைப்பதா,

அதி கூடியதாக எவ்வளவு காலம் விளக்கமறியலில் அல்லது தடுப்புக்காவலில் வைக்கலாம் என்பவைதான் கூறப்பட்டிருக்கின்றன.

ஒப்பீடு

ஏற்கனவே இருக்கின்ற சட்டத்திற்கும் தற்போதைய சட்டமூலத்திற்கும் இவ்விடயங்களில் வேறுபாடுகள் இருக்கின்றவனவா, அவை சாதகமா, பாதகமா, முன்னைய சட்டத்தைவிட, தற்போதைய சட்டமூலத்தில் கூடுதலான விடயங்கள் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளனவா? எழுத்துக்கள், பந்திகள், பிரிவுகள் கூடுவதனால் அல்லது குறைவதனால் கூடுதலான குற்றங்கள் அல்லது குறைவான குற்றங்கள் என்று அர்த்தமாகிவிடாது. விடயங்கள், அவற்றின் தீவிரத்தன்மைகள் தொடர்பாக பார்க்கவேண்டும்.

அமைப்புகளை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள், ஊடகத்துறையை பாதிக்கக்கூடிய விடயங்கள் இருக்கின்றனவா போன்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.

துஷ்பிரயோகம்

இவ்விரண்டு சட்டங்களையும் பொறுத்தவரை எது அதிக துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பு கூடியது, அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு கூடியது எது போன்ற பலவிடயங்கள் ஆய்வுசெய்யப்பட்டே ஒப்பீடு செய்யப்பட வேண்டும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்ற அதேவேளை பல பாதகமான விடயங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இச்சட்டமூலத்தில் என்ன இருக்கின்ற து என்பது தெளிவாகத் தெரிந்தால்தான் அவற்றில் எவை பாதிப்பற்றவை அல்லது குறைந்த பட்ச பாதிப்பானவை, எவை அதிக பாதிப்பானவை என்பவற்றைக் கலந்துரையாடலில் முன்வைக்கலாம்.

எனவே, கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முதல் பாகத்தில் குறிப்பிட்டதுபோல் முக்கிய கவனமெடுங்கள்.

குற்றங்கள்

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் ( PTA) இவை part-1 இல் இருக்கின்றன.

பிரிவு-2 (1)(a) குறித்த ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துவது, அவ்வாறு ஒருவரைக் கடத்துவது, அவர் மீது தாக்குதல் நடத்துவது.

இது சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் ( penal code) மரணதண்டனை அல்லது 7 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனைக் குற்றமாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு குற்றம் இந்தப் பயங்கரவாத சட்டத்தின்கீழ் ஒரு குற்றமாக கருதப்படும்.

இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ‘ஆயுள்தண்டனை’ வழங்கப்படும்.

  1. b) இச்சட்டத்தின் கீழான குற்றமொன்று தொடர்பான சாட்சி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தல், கடத்துதல், தாக்குதல் நடத்துதல்.

அக்குற்றம் குற்றவியல் சட்டத்தின்கீழ் மரண தண்டனை அல்லது 7 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை எனில் அக்குற்றம் நிருபிக்கப்பட்டால் ‘ ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

(c) குறித்த ஒருவரையோ, சாட்சியையோ பயமுறுத்தல் (criminal intimidation)

அரச சொத்துக்களைக் கொள்ளையடித்தல்

(d)Mischief களில் ஈடுபடல்

(e)அனுமதியில்லாமல் ஆயுதங்களை இறக்குமதி செய்தல்

(f) குறித்த பாதுகாப்பு பிரதேசங்களில் ஆயுதங்களை வைத்திருத்தல்

(h)வார்த்தைகளைப் பேசுவதன் மூலம், வாசிப்பதற்கான வார்த்தைகள்      ( இது துண்டுப் பிரசுரங்கள், பதாதைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்), அடையாளங்கள் அல்லது வேறு வகையான வழிகள் மூலம் வன்செயலைத் தூண்டுவது அல்லது தூண்டும் எண்ணத்துடன் செயற்படுவது, மத, இன, சமூக முரண்பாடுகள், பகைமை உணர்வுகள் போன்றவற்றைத் தூண்டுதல் அல்லது தூண்டும் எண்ணத்துடன் செயற்படுதல்

(I) பெருந்தெருக்கள், பொது இடங்கள், பாதைகளுக்கருகில் நடப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை போன்றவற்றின் எழுத்துக்களை அழித்தல், அலங்கோலப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடல்

(j) இவர்கள் இச்சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணங்கள் இருக்கும் நிலையில் சில பிரகடனப்படுத்தப்பட்டவர்களை மறைத்துவைத்தல், அவர்களது கைதைத் தடுத்தல் அல்லது தலையிடுதல்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடல் இச்சட்டத்தின்கீழ் குற்றமாகும். அவை நிருபிக்கப்படும் பட்சத்தில் 5 வருடங்களுக்கு குறையாத 20 வருடங்களுக்கு மேற்படாத காலத்திற்கு சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பிரிவு-3 (a) குற்றமொன்றை ( இச்சட்டத்தின் கீழான) செய்வதற்கு ஆயத்தப்படுத்துதல்

(b) அதற்குத் துணை போதல், சதி செய்தல், முயற்சித்தல், தூண்டுதல்

இக்குற்றங்கள் நிரூபிக்கப்படுமிடத்து 5 வருடங்களுக்கு குறையாத, 20 வருடங்களுக்கு கூடாத சிறைத்தண்டனை வழங்கப்படும்.

(c) இந்த சட்டத்தின்கீழ் ஒரு குற்றம் இழைக்கப்படும்போது ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தல் அல்லது தாக்குதல் நடத்துதல்

நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

பிரிவு-4 மேற்படி குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு மேலதிகமாக அவர்களது அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

பிரிவு-5 (a) ஒருவர் இச்சட்டத்தின்கீழ் ஒரு குற்றம் செய்திருக்கிறார் அல்லது அதற்கு ஆயத்தம் செய்கிறார் அல்லது முயற்சி செய்கிறார் என்று தெரிந்துகொண்டு அதனை பொலிசுக்கு தெரிவிக்காமல் இருப்பது;

(b) இவ்வாறான குற்றம் செய்த ஒருவரின் நடமாற்றம் அல்லது அவர் இருக்கும் இடம் தொடர்பான தகவல் தெரிந்தும் அவற்றை பொலிசுக்குத் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.

நிரூபிக்கப்படும் இடத்து இவற்றிற்கான தண்டனை: 7 வருடங்களுக்கூடாத சிறைத்தண்டனையாகும்.

புதிய ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் குற்றங்களையும் அவற்றிற்கான தண்டனைகளையும் பார்ப்போம்.

குற்றங்கள்

(a) கொலை செய்தல்

(b) கடுமையாக காயப்படுத்துதல்

(c) பணயக்கைதியாக பிடித்தல்

(d) கடத்துதல்

(e) பொதுமக்கள் பாவனைக்கான இடம், அரச அல்லது அரசாங்கத்திற்குரிய வசதித்தளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றிற்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்துதல்

( f)அத்தியாவசிய சேவைகள், வினியோகங்கள், அவற்றோடு தொடர்புபட்ட உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைத் தடுத்தல் அல்லது சேதப்படுத்தல்

(g) அரச மற்றும் தனியார் சொத்துக்கள் தொடர்பான கொள்ளை, பணம் பறித்தல், திருடுதல்

(h) பொதுமக்களது அல்லது அவர்களில் ஒரு பகுதியினரது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றிற்கு பாரதூரமான ஆபத்துக்களை ஏற்படுத்தல்

(I) இலக்ரோனிக், தானியங்கி, கணணி முறைமை, இணையத்தளம் போன்றவற்றிற்கு தடை அல்லது பாதிப்பு ஏற்படுத்துதல்

(J) சமய மற்றும் கலாச்சார சொத்துக்களை அழித்தல் அல்லது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தல்

(K) டிஜிடல், கம்பியில்லா சேவை போன்றவற்றைத் தடுத்தல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தல்

(l) இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றைப் புரிவதற்காக சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய ஒன்றை செய்யாதிருத்தல்

(m) சட்டபூர்வ அனுமதியில்லாமல் ஆயுதங்களை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், தயாரித்தல், சேகரித்தல், பெற்றுக்கொள்ளுதல், பாவித்தல் போன்றன.

( முடிந்தளவு சுருக்கமாக தரப்பட்டிருக்கிறது)

புதிய சட்டமூலத்தில் உள்ள குற்றங்களை ஒருவர் புரிந்தால் சாதாரண சட்டங்களின்கீழ் அவர் குற்றவாளியாகலாம். ஆனால் அவர் பிரேரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளியாகமாட்டார்.

இச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து எண்ணங்கள் அல்லது நோக்கங்களில் ஒன்றுக்காக அக்குற்றம் செய்யப்பட்டாலேயொழிய. அவை தொடர்பாகவும் குற்றங்களுக்கான தண்டனை தொடர்பாகவும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்; இன்ஷா அல்லாஹ்.

மறுபுறம் இச்சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தக் குற்றங்களும் இவ்வளவுதான் என எண்ணிவிடவேண்டாம். இன்னும் இருக்கின்றன. அவைகளும் அவற்றிற்கான ஒப்பீடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இறுதியாக, இரு சட்ட, சட்டமூலங்களுக்கிடையிலான சாதக பாதகங்கள் தொடர்பான ஓர் பொதுவான மதிப்பீடு, ஏனைய உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

இது இப்படியே சட்டமாக்கப்பட்டு நாளை மீண்டும் ஓர் இனவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பிரதான பாதிப்பு சிறுபான்மைக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படலாம். எனவே, இச்சட்டமூலம் தொடர்பாக விழிப்பாயிருங்கள்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...