நிலைகுலையவுள்ள அடுத்த முஸ்லிம் நாடு பாகிஸ்தானா? (லத்தீப் பாரூக்)

Date:

பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா இப்போது சூடான், இந்த வரிசையில் அடுத்து நிலைகுலையவுள்ள முஸ்லிம் நாடு பாகிஸ்தானா? என்பதே இன்றைய முஸ்லிம் உலகின் பிரதான கேள்வி.

1989ல் சோவியத் யூனியன் சிதைவடைந்தது முதல் உலகின் ஒரே வல்லரசான அமெரிக்கா, அதன் பங்காளிகளான ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபு பங்காளிகள் என எல்லோரும் சேர்ந்து பல முஸ்லிம் நாடுகளை நாசமாக்கி விட்டனர்.

1971ல் பாகிஸ்தான் இரண்டாகப் பிளவு பட்டு பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. பாகிஸ்தான் ஆயுதப்படையினர் மற்றும் அரசியல்வாதிகளினதும் சம அளவான மோசடிகளும் அவர்கள் புரிந்த குழப்பங்களும் தான் இந்த நிலைமைக்கு பிரதான காரணம்.

இந்தப் பிரிவினை இடம்பெற்று இன்று சுமார் அரை நூற்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது முதல் பாகிஸ்தானின் அரசியல் வாதிகளோ அல்லது இராணுவமோ கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

பதவி விலக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் ஏனைய வெளிச் சக்திகளிடம் சிக்கி அவற்றின் சர்வாதிகாரத்தில் தங்கி இருப்பதற்கு பதிலாக தன்னில் தானே தங்கி இருக்கக் கூடிய ஒரு தூர நோக்குப் பார்வையைக் கட்டி எழுப்பத் தொடங்கினார்.

முன்னாள் மலேஷியப் பிரதமர் மஹாதிர் மொஹமட்டுடனும், துருக்கி ஜனாதிபதி எர்டொகனுடனும் இணைந்து உலக முஸ்லிம்களை ஒரே அணியின் கீழ் கொண்டு வரும் வகையில் தனியானதோர் முஸ்லிம் நேச அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கினார்.

இம்ரானின் இந்த புதிய முயற்சி அமெரிக்கா, பிரிட்டன், ஏனைய ஐரோப்பிய நாடுகள்; இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபுலக பங்காளிகள் மத்தியில்; அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதன் விளைவுதான் இம்ரான் கானின் பதவி நீக்கம் அதனைத் தொடர்ந்து ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையில் நிறுவப்பட்ட சட்ட விரோத ஆட்சியும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும் ஆர்ப்பாட்டங்களும் இம்ரானின் மக்கள் ஆதரவை பறைசாற்றுவதாக அமைந்தன.

பாகிஸ்தான் பல எதிரிகளால் சூழப்பட்ட ஒரு முஸ்லிம் தேசமாகும். அணு ஆயுத வளம் கொண்ட இந்த ஒரேயொரு முஸ்லிம் தேசத்தை மேலும் கூறுபோட்டு நிலைகுலைய வைப்பதற்கு சூழவுள்ள எதிரிகள் தக்க தருணம் பார்த்து காத்திருக்கின்றனர்.

இம்ரான் கான் மீது இன்றைய பாகிஸ்தானின் சட்டவிரோத அரசு சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் தீவிர பழிவாங்கும் படலத்தை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன.

அத்தோடு இம்ரானை தீர்த்துக் கட்டும் அரசின் நோக்கத்தையும், அவர்களின் எஜமானர்களான அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அரபு கொடுங்கோல் சகாக்களின் தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் மறைமுக எண்ணத்தையும் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன.

 பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்

இம்ரான் கானின் கைது ஜனநாயகத்தின் இருள் சூழ்ந்த தினங்கள் எனும் தலைப்பில் பீட்டர் ஒபோர்ன் என்ற பத்தி எழுத்தாளர் எழுதியுள்ள கட்டுரையில் அமெரிக்காவின் கைப் பொம்மையாக செயற்பட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மறுத்தமை தான் அவரின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம்.

பாகிஸ்தானின் இன்றைய அரசியல் நிலைமை அரபு வசந்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் எகிப்தில் இருந்த நிலையை நினைவு படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது எகிப்தின் அன்றைய கொடுங்கோல் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டமை அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் மற்றும் அவர்களின் வளைகுடா பங்காளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த மக்கள் எழுச்சியின் விளைவாக வாய்த்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்கள் தமக்கு மிகவும் விருப்பமான இஸ்லாமிய போக்கு சகோதரத்துவ இயக்கத்தின் பிரதிநிதி மொஹமட் முர்ஸியை தமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.

இந்தத் தெரிவு மேற்கிலும், இஸ்ரேல் மற்றும் மதச்சார்பற்ற அவர்களின் அரபுலக சர்வாதிகாரிகள் மத்தியில் மீண்டும் எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்தது.

இதனால் விழித்துக் கொண்ட அவர்கள் எகிப்தில் மீணடும் செயற்கையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பனவற்றை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்கினர்.

இதற்கென ஐக்கிய அரபு அமீரகமும், குவைத்தும் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக பின்னர் வெளியான தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வாய்ப்பை இராணுவம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முர்ஷியை தூக்கி எறிந்து விட்டு முஸ்லிம் சியோனிஸவாதியான அப்துல் பத்தாஹ் அல் சிசியை பதவியில் அமர்த்தியது.

பீட்டர் ஒபோர்ன் குறிப்பிட்டுள்ள படி “எகிப்து சுதந்திரம் அடைந்தது முதல் அந்த நாட்டில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஜனாதிபதியான மொஹமட் முர்ஷி இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு பல கஷ்டங்களை அனுபவித்த அவர் ஆறு வருடங்கள் கழித்து சிறையிலேயே உயிர் துறந்தார்.

இப்போது இதே போன்ற ஒரு வரலாறு மீண்டும் மீட்டப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் இம்முறை அது பாகிஸ்தானில் இடம்பெறலாம்”.

எகிப்தின் முர்ஷியைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் முரட்டுக் குணம் இம்ரானிடமும் இருக்கின்றது.

அவரும் ஜனநாயக வழியாகப் பதவிக்கு வந்தவர். இந்த ஜனநாயகத்துக்கு ஆதரவளிப்பதாக வெறும் கொள்கை அளவில் மட்டுமே மேற்குலகம் உரிமை கோருகின்றது.

ஆனால் நடைமுறையில் ஒரு போதும் அவ்வாறு இல்லை. அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் என்று வருகின்ற போது நிலைமை மேலும் மோசமடைகின்றது. முர்ஷியை போல இம்ரானை சுற்றி ஊழல் குற்றங்கள் அவ்வளவாக இல்லை.

முர்ஷியைப் போலவே இம்ரானும் தனிப்பட்ட ஆளுமைக்கு புகழ்பூத்த ஒருவராவார். முர்ஷி ஒரு இஸ்லாமியவாதி. இம்ரான் மதீனாவின் ஆரம்ப கால இஸ்லாமிய ஆட்சியை அடிக்கடி மீட்டிக் கூறுபவர்.

தத்தமது நாடுகளை மிக மோசமாகவும் நீண்ட காலமமாகவும் தமக்கு முன்னர் ஆட்சி செய்த சுயநலத்தால் சூழப்பட்ட ஊழல் பேர்வழிகள் தான் முர்ஷியும் காணும் எதிர்கொண்ட ஒரே விதமான எதிரிகள்.

இவர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் மிகப் பெரிய விரோதிகள். இரு தலைவர்களினதும் நேர்மையும் கண்ணியமும் முன்னைய ஆட்சியாளர்களை வெற்கித் தலைகுணிய வைத்தன.

இது தான் முர்ஷியும் இம்ரானும் எதிரிகளை சம்பாதித்துக் கொள்ள மிகப் பலமாக இருந்த முக்கிய காரணி. அண்மையில் இம்ரான் கான் இராணுவத் துணைப் படைப்பிரிவால் கைது செய்யப்பட்டார். மிகவும் அபத்தமான கேலிக்குரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர் தற்போது எதிர் கொண்டுள்ளார்.

இருப்பினும் பாகிஸ்தானின் குழப்பகரமான வரலாறு பற்றி நன்கு பரிச்சயமுள்ள எவரும் இன்று எழுப்பக் கூடிய ஒரே கேள்வி இம்ரான் கான் மீண்டும் ஒரு தடவை சுதந்திரமான மனிதராக வலம் வரும் வாய்ப்பு உள்ளதா? என்பதே.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் பொதுத் தேர்தல் மூலம் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இன்றும் பாகிஸ்தானில் மிகவும் கௌரவமான புகழ்பூத்த மரியாதைக்குரிய அரசியல் தலைவர் அவர் தான்.

அடுத்த தேர்தல் அக்டோபரில் நடைபெற வேண்டி உள்ளது. இம்ரானும் இதில் போட்டியயிட உள்ளார். அதற்கான முழு உரிமை அவருக்குண்டு. அவ்வாறு அவர் போட்டியிட்டால் பாகிஸ்தானின் 75 வருட கால தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் பெற்றிராத அளவு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அவருக்கு நிறையவே உள்ளது.

சட்டவிரோதமாக ஆட்சியில் இருக்கும் இன்றைய பிரதம மந்திரி ஷெஹபாஸ் ஷரீபுக்கு இது பெரும் அழிவையே கொண்டு வரும். ஏற்கனவே இம்ரான் பிரதமராக இருந்த காலத்தில் வேட்டையாடப்பட்ட ஷரீபின்  ஊழல் மிக்க வர்த்தக நலன்களுக்கு அது பேரிடியாக அமையும்.

அமெரிக்காவுக்கும் அது பேரிடியாகவே இருக்கும். காரணம் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையைப் பெற்ற எந்தவொரு பாகிஸ்தான் அரசியல் தலைவர் மீதும்  கட்டமைப்பு ரீதியான ஒரு எதிர்ப்பு போக்கை அமெரிக்கா கொண்டிருந்தமையே இதுவரை உள்ள வரலாறாகும்.

பாகிஸ்தானை ஒன்றில் தனது வாடிக்கையாளர்கள் மூலமான சர்வாதிகாரத்தில் அல்லது தன்னோடு இணங்கிப் போகும் ஜனநாயக அரசியல் வாதிகள் மூலமாக, தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலையான திட்டமாகும்.

அமெரிக்காவின் தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, அதற்கு எதிராக மிகவும் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர்தான் இம்ரான் கான்.

அப்போதே அவரை அமெரிக்கா கவனிக்கத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் கை பொம்மையாகப் பணியாற்ற முடியாது என துணிச்சலாகவும் நேரடியாகவும் அவர் மறுத்தமை, அவருக்கு உள்ளுரில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.

ஆனால் புஷ் அல்லது ஒபாமா அல்லது வெள்ளை மாளிகையில் வேறு எவரும் இதை அடியோடு விரும்பவில்லை.

வீதிகளில் திரண்ட இம்ரானின் ஆதரவாளர்கள்

ஏனைய பல அரசியல் தலைவர்களைப் போலன்றி இம்ரான் ஒரு கொள்கைவாதி. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுல் தலிபான்களிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் பிரச்சினைகள் தலைதூக்கின.

வாஷிங்டனில் முடக்கப்பட்டுள்ள அப்கானிஸ்தானின் சொத்துக்கள், பாகிஸ்தானுக்கு மேலான அமெரிக்க விமானங்களின் நடமாட்டத்தின் அதிகரிப்பு என்பன இதற்கு பிரதான காரணங்களாயின.

இம்ரானுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை குறைவாக மதிப்பிட்டு, அவரது அரசியல் எதிரிகளை பதவியில் அமர்த்த அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பணியாற்றி உள்ளது என்று இம்ரானின் சகாக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இவை வெறும் மடத்தனமான குற்றச்சாட்டுக்கள் அல்ல. 1947ல் பாகிஸ்தான் என்ற சுதந்திர தேசம் உருவாக்கப்பட்டது முதலே அதை ஒரு அடிமை தேசமாகத் தான் அமெரிக்கா கவனித்து வந்துள்ளது.

இம்ரானுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய பெண்கள்

பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரம் நிகழ்ந்த காலப்பகுதிகளில் அமெரிக்கா உதவிகளை வாரி வழங்கி வந்துள்ளது. இதுவரை ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் மட்டுமே இராணுவ ஆட்சிக் காலப்பகுதியில் பாகிஸ்தான் வந்துள்ளார். ட்வைட் ஈஸன்ஹுவர், லிண்டன் ஜோன்ஸன், றிச்சர்ட் நிக்ஸன், பில் கிளின்டன், ஜோர்ஜ் டயிள்யு புஷ் ஆகியோரே பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதிகளாவர்.

அமெரிக்கா உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது விசுவாசம் கொண்ட ஒரு நாடாக இருப்பின், பாகிஸ்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மீது சோடிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அகற்றப்பட்டு அவர் மீண்டும் பதவிக்கு வருவதை அமெரிக்கா அனுமதிக்க வேண்டும்.

ஆனால் இன்று வரை வெள்ளை மாளிகை இந்த விடயத்தில் மௌனம் காக்கின்றது. பிரிட்டன் தனது உதடுகளை இறுக்கமாக மூடி உள்ளது.

இந்த மௌனங்களுக்கு மிகப் பெரிய அர்த்தங்கள் உள்ளன. ரஷ்யாவிலோ, ஈரானிலோ அல்லது சீனாவிலோ ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி கைது செய்யப்பட்டால் அமெரிக்காவும் பிரிட்டனும் வாய் கிழிய சத்தமிட்டு அதை கண்டிக்கும்.

அதனால் தான் பாகிஸ்தானின் ஜனநாயகமும் சுதந்திரமும் இருள் சூழ்ந்த ஒரு யுகத்துக்குள் இன்று இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலை பாகிஸ்தானில் மட்டும் அல்ல பல உலக நாடுகளில் இன்று இதே நிலை தான் காணப்படுகின்றது. எனவே இம்ரான் சுதந்திரமாக தனது பணிகளைத் தொடரட்டும்.

எகிப்தில் மொஹமட் முர்ஷிக்கு ஏற்பட்ட அதே நிலை இம்ரானுக்கும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே உள்ளன. ஆனால் எகிப்தை போலன்றி பாகிஸ்தானில் அதன் விளைவுகள் பெரும் நாசத்தை விளைவிப்பதாகவே அமையக் கூடும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...