இவ்வருட உழ்ஹிய்யாப் பிராணிகள் தொடர்பான வழிகாட்டல் அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ளது.
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத் ஆகும். ஒட்டகம், மாடு மற்றும் ஆடு ஆகிய கால்நடைகளில் இருந்தே உழ்ஹிய்யா நிறைவேற்றப்பட வேண்டும்.
உழ்ஹிய்யாவாக நிறைவேற்றப்படும் பிராணிகளில் எமது நாட்டில் மாடு மற்றும் ஆடு ஆகிய இரண்டுமே உள்ளன.
இப்பிராணிகள் உழ்ஹிய்யாவாகக் கொடுக்கும்போது மார்க்கம் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைக் கவனித்துக் கொள்வது முக்கியமானதாகும்.
அவற்றில் மாடு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருப்பதுடன் செம்மறி ஆடு ஒரு வருடம் பூர்த்தியாகி இருப்பதுடன் எமது நாட்டில் உள்ள (செம்மறி ஆடு அல்லாத) ஏனைய ஆடுகள் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருப்பதும் கட்டாயமாகும்.
அத்துடன் இப்பிராணிகள் தெளிவான குருடு, தெளிவான நோய் (அதாவது குறித்த பிராணியின் இறைச்சியை குறைக்கக்கூடிய அளவு அல்லது மெலிவுக்கு காரணமாக உள்ள நோய்) தெளிவான முடம் போன்ற குறைகளை விட்டும் நீங்கி இருப்பதும் அவசியமாகும்.
பராஃ இப்னு ஆஸிப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘ஒரு முறை எங்களுக்கு மத்தியில் எழுந்த நபியவர்கள் தெளிவான குருடு, தெளிவான நோய், தெளிவான முடம், தேர முடியாத மெலிவு எனும் நான்கு குறைகளை உடைய பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது என்றார்கள்.
தற்போது எமது நாட்டின் சில பகுதிகளில் மாடுகள் தோல் கழலை நோயினால் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே, உழ்ஹிய்யா விடயத்தில் சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அவசியம் கடைபிடிப்பதுடன் உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இன்னும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள் உணவுக்கு உகந்ததல்ல என சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்திக் கூறுவார்களாயின் அப்படியான நோய்வாய்ப்பட்டுள்ள மாடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பதைத் தவிர்த்து, நோயற்ற மாடுகளை அல்லது ஆடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.