நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 50 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 500 பேர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்கள், வடக்கு, கிழக்கு, ஹம்பாந்தோட்டை, பதுளை, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதியில் இருந்து குடிநீர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு தண்ணீர் தாங்கி கொள்கலன் வண்டிகள் மூலம் குடிநீரை விநியோகித்து வருவதாகவும் மேஜர் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.