ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கான தனது அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை களத்திற்கு கொண்டு வந்துள்ளமை, வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்படாத காணிகளை மீண்டும் வழங்குதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றவற்றை அவர் கையில் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நேர்மையான தேவை இருந்தால், மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அண்மையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
மக்களின் வாக்குரிமைக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் இதன் போது கூறியிருந்தன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி கடந்த கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
13வது திருத்தச்சட்டம் தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி, இந்த பிரச்சினையை வேறு பக்கம் திசை திருப்பியுள்ளார்.
இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரம் எனவும் அரசாங்கத்தின் ஊடாக நேரடியான தீர்வு யோசனையை ஒன்றை முன்வைக்காது, பாராளுமன்றத்திற்குள் அரசியல் கட்சிகள் இடையில் பிணக்குகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
தமிழ் அரசியல் கட்சிகளை தவிர பெரும்பான்மை சிங்கள மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பில் நேர்மையாகவோ, உண்மையாகவோ தீர்வு யோசனைகளை முன்வைக்க தயங்கலாம்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் யோசனைகளை முன்வைத்தால், அடுத்த தேர்தலில் தென் பகுதியில் வாழும் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கக்கூடும் என்பதே இந்த அரசியல் கட்சிகளின் தயக்கத்திற்கான காரணம்.
இந்த அரசியல் நிலைமையை அறிந்தே ஜனாதிபதி 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டும் என்று பிரச்சினையை திசை திருப்பி விட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த பிரச்சினையை வேறு பக்கம் திசை திருப்பி விட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை தனக்கு சார்பாக தக்கவைத்து தேர்தலுக்கு செல்ல தயாராகி வருவது தெளிவாகியுள்ளது.