2023 ஆகஸ்ட் 5 சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்றாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்து சிறையில் இட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர நாயகனாக இருந்த இம்ரான் கான், பின்னர் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 2018 முதல் 2022 வரை நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார்.
சுதந்திரமான நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவர் பின்னர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டு சதி முயற்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
இந்த அரசியல் சதியின் பின்னால் அமெரிக்காவும் வளைகுடா ஷேக்மாரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 வயதான இம்ரான் கான் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றவர்.
மேற்குலகுக்கு மிகவும் அறிமுகமானவர். பாகிஸ்தான் ஏனைய வெளிச் சக்திகளிடம் சிக்கி அவற்றுக்கே உரிய தீய நிகழ்ச்சி நிரலில் தங்கி இருப்பதற்கு பதிலாக தன்னில் தானே தங்கி இருக்கக் கூடிய ஒரு தூர நோக்குப் பார்வையைக் கட்டி எழுப்பத் தொடங்கினார்.
பாகிஸ்தானின் சுதந்திரத்தையும் அதன் நலன்களையும் விட்டுக் கொடுக்காமல் அது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.
இஸ்லாம் குறித்து அவர் சர்வதேச அரங்குகள் பலவற்றில் குரல் எழுப்பினார். முன்னாள் மலேஷியப் பிரதமர் மஹாதிர் மொஹமட்டுடனும், துருக்கி ஜனாதிபதி எர்டொகனுடனும் இணைந்து உலக முஸ்லிம்களை ஒரே அணியின் கீழ் கொண்டு வரும் வகையில் தனியானதோர் முஸ்லிம் நேச அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கினார்.
இதனால் விழித்துக் கொண்ட மேற்குலகும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் தாங்கள் எதிர்நோக்கும் அச்சத்தை உணரத் தொடங்கினர். இம்ரானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேணடும் என்ற தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
இதன் விளைவுதான் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு பெரும் தொகை இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.
தமது நலன்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருக்கின்ற இந்தப் பிரபலமான மற்றும் கவர்ச்சிகரமான அரசியல் தலைவன் இனிமேல் அரசியலில் இருக்கவே கூடாது என பாகிஸ்தானின் அரசியல் மேல் மட்டமும் இராணுவமும் கங்கனம் கட்டி செயற்பட்டன.
இதன் பெறுபேறுதான் இம்ரானுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை. இனிமேல் அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக செயற்பட உள்ளனர்.
இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதே தினம் அவர் லாகூரில் உள்ள சமான் பார்க் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அரச பரிசுக் களஞ்சியத்தில் இருந்து பரிசுகளை எடுத்து அவற்றை இம்ரான் தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு.
அவர் கைது செய்யப்பட முன் சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றியுள்ள காணொளிகளில் தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு கேட்டுள்ளார்.
“உங்களிடம் நான் விடுக்க வேண்டிய கோரிக்கை ஒன்றே ஒன்று தான் உள்ளது. நீங்கள் உங்கள் வீடுகளில் அமைதியாக இருந்து விடாதீர்கள். நான் நடத்தும் இந்தப் போராட்டம் எனது தனிப்பட்ட தேவைகளுக்கானதல்ல.
இது எனது தேசத்துக்கான போராட்டம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான போராட்டம். நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்து எழாவிட்டால் நீங்கள் அடிமைகளைப் போல் வாழ வேண்டி வரும். அடிமைகளுக்கு வாழ்வே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி உள்ளார்.
“லண்டன் திட்டம்” என்ற ஒரு விடயம் பற்றியும் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் ஆஸிம் முனீர் மற்றும் பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமர் பதவி வகித்தவரும் கடந்த 2019 முதல் லண்டனில் வசித்து வருபவருமான முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷரீப் ஆகியோர் இணைந்து தன்னை அரசியலில் இருந்து வீழ்த்துவதற்கு போட்டிருந்த திட்டத்தையே அவர் இவ்வாறு வர்ணித்துள்ளார்.
இம்ரானுடைய அரசியல் கட்சியின் அதிஉயர் பீடம் கூடி நிலைமையை ஆராய்ந்துள்ளது. நாடு முழுவதும் அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளதாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என தற்போதைய பிரதம மந்திரி ஷரீப் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
அவர் தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து எதிர்வரும் நவம்பரில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாகிஸ்தானின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் தேர்தல் தொகுதிகளுக்கான புதிய எல்லை நிர்ணயம் என்பனவற்றைப் பூர்த்தி செய்ய இன்னும் நான்கு மாதங்கள் செல்லக் கூடும் என பாகிஸ்தானின் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படுவது இன்னும் தாமதமாகலாம் என்பதையே இது உணர்த்துகின்றது.
மிகப் பெரிய கட்சியான தனது கட்சிக்கு எதிராக இராணுவத்தை தூண்டி விடவும் மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து அவர்களை திசைதிருப்பவும் ஆளும் கட்சி சதி செய்து வருவதாக குற்றம் சாட்டி உள்ள இம்ரான் இது நாட்டை சிதைத்து விடும் எனவும் எச்சரித்துள்ளார்.
“லண்டனில் தற்போது வாழ்ந்து வரும் நவாஸ் ஷரீபும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர்களும் குறைந்த பட்சம் நாட்டின் அரசியல்யாப்பு இழிவு படுத்தப்படுகின்றது, அரச நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு வருகின்றன, அல்லது பாகிஸ்தான் இராணுவம் ஒரு கெட்ட பெயரை சம்பாதித்து வருகின்றது என்பது பற்றியாவது கவலை கொண்டவர்களாக தெரியவில்லை.
அவர்கள் எல்லோருமே தாங்கள் கொள்ளையடித்த செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சுய நலனில் அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர்” என்று இம்ரான் கானை மேற்கோள் காட்டி பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான டோன் செய்தி வெளியிட்டுள்ளது.
முஸாபராபாத் நகரில் இம்ரானின் ஆதரவாளர்கள்
“இந்த நாடு நிச்சயமான ஒரு அழிவையும் சரிவையும் நோக்கி சென்றுகொண்டிருப்பது போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கனவை நான் காண்கிறேன்” என்று இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் மக்களில் 70 வீதமானவர்கள் தனது கட்சியான பிடிஐ கட்சியுடன் இருப்பதாக அவர் உரிமை கோரி உள்ளார். ஏனைய 30 வீதமானவர்கள் தான் மற்ற எல்லா கட்சிகளுக்குள்ளும் பிளவு பட்டுக் காணப்படுகின்றனர். தேர்தல் ஒன்றே தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குத் தீர்வாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களின் உள் விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன் என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளேன். இராணுவ தளபதி எனக்கு எதிராக சதி செய்து வருகின்றார் என்று எனக்கு அறிக்கைகள் கிடைத்த போதிலும் கூட நான் அவர்களின் விவகாரங்களில் தலையிட வில்லை. ஆனால் நான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் இராணுவ தளபதியை பதவியில் இருந்த நீக்கிவிடுவேன் என்று சில அரசியல்வாதிகள் அவரிடம் கூறி வருகின்றனர் என்றும் இம்ரான் கூறியதாக டோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“இம்ரான் கான் நேர்மையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இது அரசியல் யாப்பில் ஒவ்வொரு பிரஜைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையாகும். இம்ரான் மீதான விசாரணைகளின் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நபர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவர் இல்லாமல் விசாரணைகளை நடத்த பாகிஸ்தான் சட்டத்தில் இடமில்லை” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்பிரலில் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் முன்னாள் பிரதமருக்கு எதிராக 150க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதித்துறையிலும் சட்டத்திலும் பொதுவாக நாம் எதிர்ப்பார்க்கும் அடிப்படைக் கொள்கை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது செல்லுபடியற்றதாகவே அமையும். அரசியல்வாதிகள் பற்றிய அர்த்தமுள்ள முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுவதில்லை. அவை மக்களின் இதயங்களினால் எடுக்கப்படுவை அல்ஜஸீராவுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரமுகர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்துல் முயிஸ் ஜாபரி என்ற சட்டத்தரணி, இம்ரான் மீதான ஏனைய நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்களை விட தண்டனை வழங்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கு சற்று உறுதியானதாக இருந்தாலும் கூட நீதிமன்றம் கடைப்பிடித்த வழிமுறைகள் கேலிக்குரியவை என்று தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்ரானுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கலாம், அல்லது பொலிஸாருக்கு அவரை அழைத்து வருமாறு கூட உத்தரவிட்டிருக்கலாம். அவ்வாறான உத்தரவின் பின்னரும் அவர் ஆஜராகத் தவறினால் அவர் இல்லாமலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடைத்து விடும்.
ஆனால் அப்படி இல்லாமல் இம்ரான் இல்லாத நிலையில் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறுவதை நீதிமன்றம் தவிர்த்திருக்கலாம். அதன் மூலம் இந்தத் தீர்ப்பு வலுவிழக்கும் நிலையைத் தவிர்ததிருக்கலாம் என்று அந்த சட்டத்தரணி விளக்கி உள்ளார்.
லாகூரில் செயல்படும் அரசியல் ஆய்வாளர் பெனாஸிர் ஷா நீதிமன்றத்தின் தீர்ப்பு சந்தேகத்தைக் கிளப்புகின்றது என்று தெரிவித்துள்ளார். இம்ரான் கான் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாதவாறு இந்தத் தீர்ப்பு அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர்களை பாகிஸ்தான் இராணுவத்தின் சக்தி மிக்க தலையீட்டின் காரணமாக பாரதூரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பதவியில் இருந்து நீக்குவது பாகிஸ்தான் வரலாற்றில் வழமையான ஒன்றாகி விட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சிரில் அல்மேதா என்ற அரசியல் விமர்சகர் எழுதியுள்ள குறிப்பில் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் அரசுக்கும் இம்ரானின் கைது தவிர்க்க முடியாத ஒன்று காரணம் அவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு தேர்தல் பிரசாரம் ஒன்றை மேற்கொள்வது அவர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இன்றைய நிலையில் இம்ரான் சிறையில் இருந்தாலும் கூட பெரும்பாலும் பிரபலம் அற்ற ஒரு சுதந்திர வேட்பாளரை நியமித்து அவருக்கு பூரண ஆதரவளிப்பதன் மூலமும் இம்ரான் தனது செல்வாக்கை நிரூபிக்கலாம்.
பாகிஸ்தானை பிளவு படுத்தி பங்களாதேஷை உருவாக்கிய அதே இராணுவ மற்றும் அரசியல் சக்திகள் தான் இப்போது மீண்டும் தமது கைவரிசையைக் காட்டி உள்ளனர் என்பதை மறந்து விட முடியாது.
பாகிஸ்தானை பலுசிஸ்தானில் இருந்து தொடங்கி மேலும் நான்கு துண்டுகளாகப் பிளவு படுத்தும் ஒரு காரியத்தை தான் தாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இந்த தீய சக்திகள் உணரத் தவறி உள்ளன.