பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள சக்திகளுடன் இலங்கை உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் பலஸ்தீன் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடலொன்றை இலங்கை – பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் திங்களன்று (15) நடத்தியது.
இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பொதுச் செயலாளர் பௌஸர் பாரூக், சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுமான அமீன் இஸ்ஸதீன், தயா லங்காபுர, ஹனா இப்ராஹீம் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நிலைமைகள் குறித்து அவர்கள் அமைச்சரிடம் விளக்கியதோடு அந் நாட்டின் சீரற்ற நிலைமையையும் சுட்டிக் காட்டினார்கள்.
பலஸ்தீன் தொடர்பாக 1972 முதல் இலங்கையில் ஆட்சி செய்த அனைத்துத் தலைவர்களினதும் நிலைப்பாட்டையும் அவர்கள் இதன்போது எடுத்துரைத்தனர்.
பலஸ்தீன மக்கள் தினம்தோறும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் அலசப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி,
பலஸ்தீன மக்களுக்கான சுயாதீன உரிமையின் அடிப்படைக் கொள்கைக்கான இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை வலியுறுத்தியோடு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக இரு நாடுகளின் கட்டமைப்பின் ஊடாக விரைவான தீர்மானம் எட்டப்பட வேண்டியதன் அழுத்தமான தேவையும் வலியுறுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.