செல்வந்த முஸ்லிம் நாடுகள் உட்பட சகலராலும் கைவிடப்பட்ட நிலையில் றோஹிங்யா முஸ்லிம்கள்- லத்தீப் பாரூக்

Date:

மியன்மாரில் றோஹிங்யா இன முஸ்லிம்கள் இன சம்ஹாரம் செய்யப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2017 ஆகஸ்ட் 25ல் மியன்மாரின் இராணுவ ஜுண்டா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு காட்டுமிரண்டித் தனத்துடன் கூடிய வன்முறைகளை றோஹிங்யா இன முஸ்லிம்கள் செறிந்து வாழும் றாகின் மாநிலத்தில் கட்டவிழத்து விட்டனர்.

இதனால் பத்து லட்சத்துக்கும் அதிகமான றோஹிங்யா மககள் பாதுகாப்பான இடங்களை நோக்கி படையெடுத்தனர்.

பயங்கரமான காடுகள் ஊடாக பல தினங்கள் நடந்தும், வங்காள விரிகுடா ஊடாக ஆபத்தான கடல் பகுதியைக் கடந்தும் பாதுகாப்புத் தேடி அவர்கள் பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் பகுதியை வந்தடைந்தனர். இந்தப் பகுதிதான் இன்று உலகின் மிகப் பெரிய அகதி முகாமாக மாறி உள்ளது.

மிகவும் நெறிசலான முகாம் அமைப்புக்குள் அவர்கள் தற்காலிக குடில்களில் வா

ழ்ந்து வருகின்றனர். பாதகாப்புக்காகவும் உணவுக்காகவும் குடி நீருக்காகவும் சுகாதாரத்துக்காகவும் அவர்கள் முழுக்க முழுக்க மனிதாபிமான உதவிகளில் தங்கி வாழுகின்றனர்.

றாகிங் மாநிலத்தில் தற்போதுள்ள சுமார் ஆறு லட்சம் றோஹிங்யா மக்கள் மீது தொடர்ந்தும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர்களும் அங்கு முகாம்களுக்குள்ளும் தமது கிராமங்களுக்குள்ளும் முடக்கப்பட்டுள்ளனர்.

நடமாடுவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. போதிய சுகாதார வசதிகள், கல்வி வசதிகள், உணவு மற்றும் வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்டும் வரையறுக்கப்பட்டும் உள்ளன.

“உலகில் மிகவும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுபான்மையினர்” என றோஹிங்யாக்களை ஐக்கிய நாடுகள் சபை வர்ணித்துள்ளது. அவர்கள் முன்னர் வாழ்ந்த தமது வீடுகளுக்கு திரும்பக் கூடிய நிலைமைகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. திரும்பிச் செல்லுவது பாதுகாப்பானது எனக் கூறப்பட்டாலும் மியன்மாருக்கு சுயமாக நிலையாக மீளத் திரும்பிச் செல்லும் வழிவகைகள் ஏற்படுத்தப்படுவதே நல்லது.

இராணுவ சதியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சொன் சூகி றோஹிங்யாக்களுக்கு எதிரான இனஒழிப்பு நடவடிக்கைகளை மொளனமாக வேடிக்கை பார்த்து அதனை ஆதரித்தார். இராணுவ காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்தும் வகையில் அவர் 2019ல் ஹேக் சென்றார்.

பர்மா அல்லது மியன்மார் பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கிய பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. முஸ்லிம்கள் கணிசமான ஒரு சிறுபான்மையாக அங்கு வாழுகின்றனர்.

சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு மேலாக அங்கு றோஹிங்யா எனப்படும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மியன்மாரின் கனிப்பொருள் வளம் மிக்க செல்வச் செழிப்புடன் கூடிய வங்காள விரிகுடாவின் கரையோரங்களை அண்டிய றாகின் மாநிலத்திலேயே அவர்கள் செறிவாகக் காணப்படுகின்றனர்.

பல நூற்றாண்டு காலமாக அவர்கள் பிரதான பிரிவு பௌத்த சமூகத்துடன் வாழ்ந்து வந்தனர். சம உரிமைகளோடு சமாதானமாகவும் இன நல் இணக்கத்துடனும் அவர்கள் வாழ்ந்து வந்தனர். மியன்மாரில் ஸ்தாபிக்கப்பட்ட அரசுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் கூட முஸ்லிம்கள் பதவி வகித்துள்ளனர். ஆயுதப் படைகளில் கூட அவர்கள் உயர் பதவிகளில் இருந்துள்ளனர்.

பிரதமர் யூ நூ வின் ஆட்சியில் (1948 – 1962) முஸ்லிம்கள் அங்கம் வகித்துள்ளனர். வியாபாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளில் மேலோங்கி காணப்பட்ட முஸ்லிம்கள் பலர் செல்வந்தர்களாகவும் வசதிகளோடும்; வாழ்ந்துள்ளனர்.

1962ல் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சியோடுதான் அங்கு நிலைமைகள் மோசமடையத் தொடங்கின. இராணுவ அரசு எல்லா சிறுபான்மை குழுக்களோடும் யுத்தத்தில் ஈடுபட்டது. திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது. 1823 க்கு முன்பிருந்து பர்மாவில் தமது பரம்பரையை நிரூபிக்க முடியாத எவருக்கும் குடியுரிமை கிடையாது உன்ற சட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த சட்டம் இரவோடு இரவாக முஸ்லிம்கள் பலரின் குடியுரிமைகளை இல்லாமல் ஆக்கியது. பல தலைமுறைகளாக அவர்கள் பர்மாவில் வாழ்ந்திருந்தும் கூட அவர்களுக்கு இந்நிலை உருவானது.

இராணுவ உயர்பீடம் அசின் விராத்து என்ற பௌத்த மதகுருவை தெரிவு செய்து அவர் தலைமையில் இராணுவ குழுவொன்றை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டிவிடவும், முஸ்லிம்களுக்கு எதிராக மக்களை மூளைச் சலவை செய்யவும் அந்தக் குழுவை இராணுவம் பயன்படுத்தியது.

பின்னர் அவர்கள் முஸ்லிம் கிராமங்களை எரித்தனர். திட்டமிட்ட வகையில் கண்ட இடத்தில் எல்லாம் முஸ்லிம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டனர், முஸ்லிம்கள் உயிரோடு தீவைத்து கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலின் பின் உலகளாவிய மட்டத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான அச்ச நிலையை மியன்மாரின் இராணுவ ஜுண்டா மிக இலாவகமாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் றோஹிங்யா முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டுக்குள்ளேயே எதுவும் அற்றவர்களாக்கப்பட்டனர்.

மிகக் கடுமையான துன்பங்களை அவர்கள் அனுபவித்தனர். வறுமை மற்றும் அறிவீனம் என்பனவற்றின் விளிம்பு நிலைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் உருக்குலைக்கப்பட்டு கேவலமான மனிதப் பிறவிகளாக மாற்றப்பட்டனர்.

இந்தத் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. ஆனால் உலகம் அதை கண்டு கொள்ளவே இல்லை. முஸ்லிம் நாடுகள் கூட மிகக் குறைந்தளவு தான் இதுபற்றி பேசின. உலகம் கண்டு கொள்ளாத, உரிமைகளுக்காக யாரும் குரல் கொடுக்காத, எவருமே உதவ முன்வராத ஒரு சமூகமாக றோஹிங்யா முஸ்லிம்கள் மாறினர் இல்லை மாற்றப்பட்டனர்.

இராணுவக் கொடுமைகளில் இருந்து தப்பும் நோக்கில் முஸ்லிம்கள் பல மைல்கள் தூரம் முழங்கால் அளவு ஆழமான நீரிலும் அடர்த்தியான சகதியிலும் உயிரை கையில் பிடித்தவாறு நாள் கணக்காக நடந்து நாட்டை விட்டும் தப்பினர்.

இந்த ஆபத்தான் பயணத்தின் போது பலர் தமது அன்புக்குரியவர்களை சுமந்து வந்த காட்சிகள் மனச்சாட்சி உள்ளவர்களின் உள்ளங்களை உருகச் செய்து இன்னமும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் வளைகுடா ஷேக்மாரின் கண்களில் மட்டும் ஏனோ இந்தக் காட்சிகள் படவே இல்லை. இந்த ஷேக்மார் கடந்த ஒரு தலைமுறையாகத் தான் செல்வத்தையும் சுகங்களையும் அனுபவித்து வருகின்றனர். அதற்கு முன் அவர்களும் வறுமையாலும் அறிவீனத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

ஆனால் இன்று தம்மிடம் உள்ள செல்வத்தில் அவர்கள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, மேலைத்தேச ஆயுத உற்பத்தியாளர்களை தாராளமாக போஷித்து வருகின்றனர்.

2017 ஆணஸ்ட் 25 முதல் மியன்மாரின் இராணுவ பீடமும் அவர்களின் காடையர்கள் கும்பல்களும் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இன சம்ஹார பிரசாரத்தை தொடங்கினர். றாகின் மாநிலத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களை துடைத்தெறிவது தான் அவர்களின் திட்டம்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என றோஹிங்யா மக்களுக்கு எதிரான மியன்மார் இராணுவத்தின் கொடூரங்கள் தொடர்ந்தன.

இந்த வன்முறைகளில் இருந்து உயிர் தப்பி வந்தவர்கள் மனித உரிமை கண்கானிப்பகத்திடம் தெரிவித்துள்ள தகவல்களின் படி ஆங் சொங் சூகி இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கண்டும் காணாமல் அவற்றை மொளனமாக அனுமதித்தவராகவும் மன்னித்து ஏற்றுக் கொண்டவருமாகவே இருந்தார்.

றோஹிங்யா மக்கள் சுட்டும் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டபோதும், அவர்கள் சூறையாடப்பட்ட போதும் ஆயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து துறத்தப்பட்ட போதும் சூகி மக்கள் பிரதிநிதிகள் சiபின் உறுப்பினராகவும் நாட்டின் தலைவியாகவும் இருந்தார்.

2016 டிசம்பரில் சிரியாவின் அலெப்போ நகரம் வீழ்ந்த போது ஒட்டு மொத்த உலகமும் அதில் கவனம் செலுத்திய வேளையில், நோபல் பரிசு வென்ற 12க்கும் மேற்பட்ட புத்திஜீவிகள் றாகின் மாநிலத்தில் ஒரு பேரவலம் காத்திருக்கின்றது என்ற எச்சரிக்கையை வெளிப்படையாக விடுத்தனர்.

அது இன சுத்திகரிப்பாகவும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையப் போகின்றது என அவர்கள் எச்சரித்தனர். ஆனால் உலகம் அதை பொருட்படுத்தவில்லை.

பங்களாதேஷ் எல்லையை வந்தடைந்த றோஹிங்யா பெண்களில் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களால் பேட்டி காணப்பட்ட 101 பெண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள், மியன்மார் ஆயுதப் படைகளால், ஒன்றில் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாக அல்லது ஏனைய வகையிலான பாலியல் துன்பங்களுக்கு ஆளானதாக தெரிவித்தனர்.

“என் கன் முன்னாலேயே எனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் என்னுடைய ஆடைகளை அவிழத்து நிர்வாணமாக்கி அவர்களில் ஐந்து பேர் மாறி மாறி என்மீது பாலியல் குற்றம் புரிந்தனர்.

அப்போது என்னுடைய எட்டு மாத ஆண் குழந்தை பசியால் வீறிட்டு அழுது கொண்டிருந்தான். அதை சகிக்க முடியாத அவர்கள் அந்தப் பிஞ்சுக் குழந்தையையும் குத்திக் கொன்றனர்” என்று ஒரு பெண் தனக்கு நடந்த கொடூரத்தை கூறினார்.

2017 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்திய ஒரு அறிக்கையில் மியன்மார் இராணுவம் றோஹிங்யா மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “மிகவும் பரவலாக ஆனால் நன்கு திட்டமிடப்படட முறையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. றோஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி வருவதை தடுப்பதே இதன் வெளிப்படையான மூலோபாயமாக இருந்தது.

பாரிய அளவில் அச்சத்தையும் மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதே இதன் பிரதான குறிக்கோள் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் செய்த் றாத் அல் ஹ{ஸேன் றோஹிங்யா மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை இன ஒழிப்புக்கான ஒரு பாடப் புத்தக உதாரணம் என்று வர்ணித்திருந்தார்.

திபெத் பௌத்த மக்களின் மரியாதைக்குரிய ஆனமிகத் தலைவர் தலய் லாமா “பர்மாவில் பௌத்த தீவிரவாதம் றோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் மீது துன்புறுத்தல்களை கட்டவிழத்து விட்டுள்ளது.

புத்தபிரான் இன்று இருந்திருந்தால் பெரும்பான்மை பௌத்தர்களிடமிருந்து தமது உயிரைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கும் சிறுபான்மை றோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிச்சயம் உதவி இருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஒரு இன ஒழிப்பு செயல் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

“றோஹிங்யா மக்களை மியன்மார் நடத்துகின்ற விதம் காட்டுமிராண்டித் தனமானது” என நோபல் பரிசு வென்ற அமர்த்தயா சென் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு உலகம் முழுவதும் உளள் மக்களாலும் அரசுகளாலும் இந்த காட்டுமிராண்டித் தனம் கண்டிக்கப்பட்டது.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் எதுவெனில் இந்த அநியாயங்கள் அனைத்தும் உலக மகா சக்திகளின் ஆதரவோடு தான் இடம்பெற்றன. முஸ்லிம் நாடுகள் மட்டும் இதை கண்டும் காணாமல் இருந்து விட்டன.

றோஹிங்யா மக்கள் மீதான கொடுமைகள் பற்றி ஆராய்ந்து மியன்மார் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேச ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூடிய போது ரஷ்யாவும் சீனாவும் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அதை தடுத்து விட்டன. இஸ்ரேல் மியன்மார் இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கியதாக மனித உரிமை செயற்பாட்டுக் குழுவொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் மியன்மார் மீது விதித்திருந்த தடைகளையும் மீறி இஸ்ரேல் இதனை செய்துள்ளது. இந்த இனப் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களை மறைமுகமாக ஊக்குவித்தார்.

கடைசியாகக் கிடைத்துள்ள தகவல்களின் படி ஒருசில தினங்களுக்கு முன் படகொன்றின் மூலம் வங்காள விரிகுடாவை கடக்க முயன்ற றோஹிங்யா மக்களுள் 23 பேர் படகு கவிழ்ந்து கடலுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் 30 பேரை காணவில்லை. எட்டு பேர் மட்டும் இதில் உயிர் தப்பி உள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

50க்கும் அதிகமானவர்கள் மலேஷியா நோக்கி பயணம் மேற்கொண்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மியன்மாரில் கொடுமைகள் தாங்க முடியாது பங்களாதேஷ் வந்து அங்கும் நிலவுகன்ற வறுமை காரணமாக வாழ முடியாமல் வேறு இடங்களை நோக்கி றோஹிங்யா மக்கள் இடம்பெயரை முனைவதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகின்றது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் 13 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...