13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி’ என்ற தலைப்பில் ஆய்வரங்கொன்று நேற்று (30) வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்விற்கான மையத்தில் சமூக நீதிக்கான கற்கை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (ஊநுழு) சிராஜ் மஷ்ஹூரின் தலைமையிலும் சமூக நீதிக்கட்சியின் தலைவர் நஜா முஹம்மதின் நெறிப்படுத்தலிலும் இவ்வாய்வரங்கு இடம்பெற்றது.
இதில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக – அரசியல் செயற்பாட்டாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சகோ.சிராஜ் மஷ்ஹூர் தமது வரவேற்புரையில், முஸ்லிம் சமூகத்தில் அரசியல் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு குறித்த நிலைப்பாடுகளை எட்டுவதற்கு பல முயற்சிகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் சமூக நீதிக்கான கற்கை மையம் ஊடாக முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகள் மாத்திரமல்லாது எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை மையத்தினை நகர்த்திச்செல்வதே தமது இலக்கு என்று குறிப்பிட்டார்.
ஆய்வரங்கை நெறிப்படுத்திய சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மத்,
‘சமூக நீதிக் கட்சியின் ஆய்வுப் பிரிவாக செயற்படும் சமூக நீதிக்கான கற்கை மையம், கட்சி அரசியலுக்கு அப்பால் பரந்துபட்ட தளத்தில் சகலரையும் உள்வாங்கி செயற்படும் ஒரு பொதுத் தளமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்த வகையில் இன்றைய நிகழ்வும் உங்கள் அனைவரதும் வருகையும் எமது ஆய்வு மைய உருவாக்கத்தின் நோக்கத்தினை நிறைவு செய்துள்ளது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு சமூக நீதிக்கான கற்கை மையத்தின் செயற்பாடுகளை முன்னோக்கி நம்பிக்கையோடு நகர முடியும் என்ற உத்வேகத்தை தந்துள்ளது’ எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ், 13 ஆம் திருத்தச்சட்டம் மற்றும் அதன் முழு அமுல்படுத்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள சாதக பாதகங்கள் குறித்து சுருக்கமாக தனது அறிமுக உரையை நிகழ்த்தினார்.
கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி அனீஸ் ஷரீப்,
13 ஆவது திருத்தத்துக்கு அ ப்பால் நாம் முதலில் கிழக்கில் புதியதோர் அரசியல் தீர்வினை நோக்கி நகரவேண்டும். நாட்டிற்கு ஓர் அரசியல் தீர்வு அவசியமாகும். இன்று பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வில் முஸ்லிம் சமூகம் பற்றி பேசப்படவில்லை இது. வேதனைக்குரியதாகும்.
13-வது திருத்தச் சட்டம் பற்றி ஆராயும் போது கடந்த கால எதிர்கால சமகால நிகழ்வுகள் பற்றி பேச வேண்டும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழர்களின் பூமி என்றதன் அடிப்படையில் ஆனதாகும்.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்தால் அது தமிழர்களின் தாயகத்தை ஆதரிப்பதாக அமையும் வடக்கு கிழக்கு இணைந்திருந்த நிலையிலே 1990 இல் முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
வடக்கு கிழக்கு இணைந்திருந்த போதே 8000 முஸ்லிம்கள் வடகிழக்கில் கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் வடக்குடன் கிழக்கை இணைப்பதா என்ற கேள்வி எழுகிறது. வடக்கில் 34 உள்ளூராட்சி சபைகளும் கிழக்கில் 45 உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்றன.
கிழக்கில் உள்ள தமிழர்களும் வடக்குடன் இணைவதை எதிர்க்கின்றனர் இலங்கையில் உள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணம் தனித்துவமானது. இன்று கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று பெரும்பான்மை சமூகம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதை எதிர்த்து வருகிறது. இதனால் 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணிக்கும் வரை 13வது திருத்தச் சட்டத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே இந்த நிலையில் கிழக்கை மையமாகக் கொண்டு அங்குள்ள மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுத்திட்டமொன்று பரீட்சார்த்தகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் இதுதான் சிறந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர்.
சமூகத்திற்கான அரசியல் தீர்வு திட்டம் ஒன்றினைக் கோரி முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல் எழுப்ப வேண்டும் நாம் இன்று வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறோம் அது தவிர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் அரசியல் தீர்வு திட்டத்தில் ஒற்றுமைப்பட வேண்டும் பெரும்பான்மை சமூகத்திற்கு எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்கு எம்மிடம் சிங்கள மொழியிலான அச்சு ஊடகமோ இலத்திரனியல் ஊடகமோ இல்லை.
அரசியல் தீர்வு விடயம் மற்றும் 13வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களுடன் சமூக இயக்கங்கள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் முஸ்லிம்களின் காணிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றுபட வேண்டும்.
சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சமூக நீதிக் கட்சியின் தவிசாளருமான சிராஜ் மஷ்ஹூர்
பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால் இந்த நிலைமை முஸ்லிம்களையே பாதிக்கும். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டாலும் இந்த நிலைமையே ஏற்படும் இவ்வகாரங்களில் கிழக்கு மாகாணம் தனியாக பேசப்பட வேண்டும்.
நாட்டின் பல மாகாணங்களில் முஸ்லிம்களின் பிரச்சனைகள் வெவ்வேறாக அமைந்துள்ளன. மேல் மாகாணத்தில் 25 வீதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மத்திய மாகாணத்திலும் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். வடமேல மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணம் என்பனவும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முக்கியமானதாகும். இந்த நான்கு பிரிவுகளிலும் ஒரே வகையான தீர்வினை நோக்கி செல்ல முடியாது. வடக்கில் சிங்கள அவர்களே இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக இருக்கிறார்கள். வடகிழக்கில் நிலவும் இனப்பிரச்சனைக்கு காரணம் காணிகளே எனவே அரசியல் தீர்வு திட்டம் முஸ்லிம்களின் காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதேவேளை ஜனாதிபதி முன் வைத்துள்ள மாவட்ட அபிவிருத்தி குழுக்கள் அமைக்கும் திட்டம் சிறந்ததாகும்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன்
வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டி இருக்கிறது இங்கு சகவாழ்வு நிலவ வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் தீர்வு திட்டத்தில் தமிழர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் முஸ்லிம்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
அரசியல் தீர்வு திட்டம் குறித்து பேசும் போது ஒவ்வொரு பிரதேச மக்களினதும் பிரச்சனைகள் வேறுபட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனியான தீர்வு அவசியம் அதனால் நாம் புதிய தீர்வு திட்டம் பற்றி ஆலோசிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் நாம் ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து பேச வேண்டும் ஏன் இதுவரை அரசியல் தீர்வு கிடைக்காமல் போனது என்பதை ஆராய வேண்டும் தெற்கில் வாழும் மக்கள் இடையே நாடு பறிபோகப் போகிறது என்று அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது.
நாம் தமிழ் தரப்புடன் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். தமிழர்கள் வடகிழக்கு இணைப்பை கோரி நிற்கின்றார்கள், இதன் மூலமே அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும் என்கிறார்கள் அதிகார பகிர்வின்போது எமது தொழில், எமது காணி உட்பட ஏனைய வளங்களின் நிலைமை என்னவாகும் என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்நிகழ்வில் கிண்ணியா மஜ்லிசுஸ் சூறாவின் செயலாளரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற பதிவாளருமான நியாஸ், பாராளுமன்ற சிரேஷ்ட ஆய்வாளர் அஜ்வதீன், அரசியல் செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ், அரசியல் செயற்பாட்டாளர் வஸீர் முக்தார், சிரேஷ்ட சட்டத்தரணியும் முன்னாள் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான ஜாவித் யூஸுப், சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக், சமூக செயற்பாட்டாளர் மாஸ் எல். யூஸுப், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பஸ்லான் முஹம்மத், முசலி பிரதேச சபை உறுப்பினர் சட்டமானி முஜிபுர் ரஹ்மான் மற்றும் சமூக நீதிக் கட்சியின் பிரதித்த தவிசாளர் ரிஸானா சிமாஸ் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இவ்வாய்வரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிரேஷ்ட சட்டத்தரணி முனீர், அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ், கௌரவ கலாநிதி மரிக்கார், அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத், இளநெஞ்சன் முர்ஷிதீன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வரங்கத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்த முஸ்லிம் சமூகத்தின் நிலையான ஒரு நிலைப்பாட்டிற்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆய்வரங்கத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், ஒரு நிலைப்பாட்டு அறிக்கையாக வெளியிடப்படல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதம் தமது முதல் நிகழ்வாக ‘மலையகம் 200′ ஆய்வரங்கித்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், ’13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கமானது சமூக நீதிக்கான கற்கை மையத்தின் இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.