நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் 864 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் மாத்திரம் இதுவரை 161 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் எதிர்வரும் வாரம் முதல் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாத்திரம் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எண்ணிக்கையில், 10 வீதமானோர் சிறுவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, பொலநறுவை மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கண்டறியப்பட்ட மூன்று தொழுநோயாளர்கள் அடங்கலாக 25 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தோலில் வெளிர் நிற புள்ளிகள் மற்றும் குறித்த இடத்தில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் சுயமாக நோயைக் கண்டறிவதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு தோலில் வெளிர் நிற புள்ளிகள் காணப்படுமாயின் அவற்றை புகைப்படம் எடுத்து 075 4088604 அல்லது 075 4434085 என்னும் வட்ஸ்அப் இலக்கங்களுக்கு அனுப்புவதன் மூலம் நோய் குறித்த விடயங்களை அறிந்துகொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.