மனிதனை சந்திரனில் கால் வைக்க இறைவன் அனுமதித்தது எதனால்?: ஒரு ஆன்மிகச் சிந்தனை

Date:

ஜ. ஜாஹிர் உசேன், ரியாத்

நிலவைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. எட்டா தூரத்திலிருக்கும் நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்துள்ளான்.

ஆகஸ்ட் 23ஆம் நாள் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அதுவும் இதுவரை யாரும் சென்றிராத தெற்குப் பகுதிக்குச் சென்று சாதனை படைத்திருக்கும் முதல் நாடு இந்தியா தான்.

ஏற்கனவே, மூன்று நாடுகள் இதுவரை நிலவுக்குச் செல்ல விண்கலங்களை அனுப்பி இருக்கின்றன.

நிலவைக் குறிக்க நிலா, சந்திரன் எனப் பல பெயர்கள் தமிழில் உள்ளன. திருக்குர்ஆனில் கமர்(சந்திரன்) என்று ஒரு அத்தியாயமே இருக்கிறது.(அத்தியாயம் 54)

இறைவனுடைய படைப்புகளில் நமக்கான படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் அனுமதியின் பெயராலேயே, அவனின் படைப்புகளில் ஒன்றான சந்திரனிலும் காலடி எடுத்து வைக்க மனிதனால் முடிகின்றது. இதைத்தான், அல்லாஹ் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்.

‘ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்’. (திருக்குர்ஆன் 55:33)

நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்க அல்லாஹ் அனுமதித்ததாலேயே, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தார். இதுவரை பலரும் எடுத்த முயற்சிகளில், ஒரு சில மட்டுமே சாத்தியமானது.

சில நாள்களுக்கு முன் தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லுனா – 25 இதற்கு முக்கிய உதாரணம். இந்தியாவின் சந்திரயான்-2ம் தோல்வியில் தான் முடிந்தது. சந்திரயான்-3ன் மூலம், உலக அளவில் இந்தியா மிகப்பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

திருமறையில், ‘திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது’ எனப் பலமுறை, மீண்டும் மீண்டும் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான். இந்த நினைவூட்டல், மனிதனை அல்லாஹ்வுடைய படைப்புகளைக் குறித்துச் சிந்திக்கச் சொல்கிறது.

ஆராயச் சொல்கிறது. மனிதன் முயன்றால் சந்திரன் குறித்து அவன் கொண்டிருக்கும் அறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டுகிறது.

இப்படி இறைமறையின் வழிகாட்டலின் படி நடந்ததன் விளைவாகத் தொடக்க காலத்தில் முஸ்லிம்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து விண்ணியலிலும் வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளார்கள். காலப்போக்கில் அவற்றிற்கான முயற்சிகளில் அவர்கள் பின்தங்கி விடவே இன்று அறிவியலில் பின் தங்கி இருக்கிறார்கள்.

மிக முக்கியமாக ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இதுவரை நிலவில் கால் பதித்த நான்கு நாடுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பகுதி, திசையாக முயன்று பார்த்து விட்டது. ஆனாலும் நிலவு என்ற துணைக் கோளைக் முழுமையாக மனிதனால் கூட இதுவரை அறிய முடியவில்லை.

நிலவின் தென் பகுதிக்கு இந்தியாவின் விண்கலம் தான் முதலில் சென்றிருக்கிறது. நிலவின் எல்லாப் பக்கங்களையும் கண்டறிய, கால் பதிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ? நம் காலத்தில் அது நடந்து முடியுமா? நம் தலைமுறைகளின் காலத்தில் நடக்குமா? அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

நிலவில் மனிதன் தங்க முடியுமா? அதற்கான வழிகளாக மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், ஆக்ஸிஜன் இருக்கின்றனவா? இப்படி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதிலிருந்து வானங்கள், பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல, அல்லாஹ் அனுமதித்தாலே ஒழிய மனிதனால் அங்கு கால்வைக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மனிதனை சந்திரனில் கால் வைக்க இறைவன் அனுமதித்தது எதனால்? இதில் இறைவன் சொல்லும் செய்திதான் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தை, அண்ட சராசரத்தை, அகில உலகத்தைப் படைத்த இறை வனைக் குறித்து மனிதனைச் சிந்திக்க வைக்கவே இந்த ஏற்பாடு என்பதைத் தவிர இதற்கான பதில் வேறு என்னவாக இருக்க முடியும்?

நிலவைப் படம்பிடித்து அனுப்புவதையே சாதனையாக இன்னும் மனிதன் பேசிக் கொண்டு இருக்கின்றானே! அவன் இந்த நிலவைப் படைத்த, அந்த சர்வ வல்லமை கொண்ட இறைவனைக் குறித்து சிந்தித்துப் பார்க்கின்றானா? இந்த சூரியன், சந்திரன், கோள்கள், பால் வீதி, விண் மண்டலம் எல்லாம் தானே தோன்றியவையா? அவற்றையெல்லாம் ஓர் ஒழுங்கமைப்பில் படைத்தவன் யார்? அவற்றைப் பராமரித்து வருபவன் யார்?

‘அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்’. (திருக்குர்ஆன் 2 : 22)

நம்மைப் படைத்த இறைவனைக் குறித்துச் சிந்திப்போம். அந்த ஏக இறைவனின் மீது நம்பிக்கை வைப்போம். அவன் காட்டிய வழியில் நடப்போம். அவன் அருள் பெற்று மறுமையில் வெற்றி பெறுவோம்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...