நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும், விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக கடந்த ஜுன் 8 ஆம் திகதி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.
குறித்த குழு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு செயற்படுகின்றது.
இந்த குழுவின் மூலமே பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் எழுத்துமூலம் legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டை என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.
இதற்கமைய ஆர்வமுள்ள தரப்பினர் 2023 ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் அனுப்பிவைக்க முடியும்.