இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் முதல் முறையாக தனது சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனின் ‘800’ என்ற சுயசரிதை திரைப்படத்தை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானத்தை இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனுக்கு செய்யும் அர்த்தமுள்ள மரியாதையாக கருதுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இந்த திரைப்படத்திற்கு மாத்திரம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் சட்டவிதிகளுக்கு அமைய வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து, திரையரங்குகளில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
800 திரைப்படம் நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதுடன் சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.