பலஸ்தீன மக்களது உரிமைகளை மதிக்கக் கோரியும், இஸ்ரேல் தனது மனிதாபிமான எல்லைகளை மீறாமல் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என தேசிய ஷூரா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீன் போர் தொடர்பில் தேசிய ஷூரா சபை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில், வல்லரசுகளது தேவைக்காக மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேல் எனப்படும் நாடு கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக பலஸ்தீன மக்களுக்கு எதிராக பல்வேறு வகையான அட்டூழியங்களையும் செய்து வருகிறது.
பூர்வீக குடிகளாக அப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்களது நிலங்களை ஆக்கிரமித்து உலகின் பல நாடுகளிலுமிருந்த யூதர்களுகளை குடியேற்றிவருகிறது.
பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் உலகின் பல நாடுகளிலும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணிலும் அகதிகளாக அடிப்படையான தேவைகள் மறுக்கப்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்தேர்ச்சியான இன்னல்கள் வதைகளின் போது அவ்வப்போது பலஸ்தீனர்கள் பொறுமையிழந்து தமது எதிர்ப்பை காட்டிவந்துள்ளனர்.அதன் சங்கிலித் தொடராகவே தற்போதைய அவர்களது நடவடிக்கைகளும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எழுபது வருடங்களுக்கு மேலாக அவர்கள் அனுபவித்த அடக்கு முறைகளை மறந்த நிலையில் பலர் இஸ்ரேலின் பக்கம் நியாயமிருப்பதாகக் கூறுவது முற்றிலும் பிழையான வாதமாகும்.
உலகில் இஸ்ரேலர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த வேளை அவர்களுக்கு ஒரு நிலம் வழங்கப்பட்ட போது அதனுடன் நிறுத்தாது எகிப்து சிரியா ஜோர்டான் பலஸ்தீன் ஆகிய நாடுகளது நிலங்களையும் ஆக்கிரமித்தது மட்டுமன்றி மத்தியகிழக்கில் உள்ள அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டு அடாவடித்தனம் புரியும் ஒரு சட்டபூர்வ அரசின் பக்கம் எப்படி நியாயமிருக்க முடியும்?
ஐக்கிய நாடுகள் சபையில் இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்களை இஸ்ரேல் தன்னை ஸ்தாபித்த வல்லரசுகளது அனுசரணையுடன் அப்பட்டமாக மீறி வருவதற்கு முழு உலகமும் சாட்சியாகும்.
இது இப்படியிருக்க பாலஸ்தீன ஆயுதக்குழுக்களது பதிலடி கொடுத்தல் என்ற பெயரில் சிறுவர்கள் பெண்கள் முதியோர் நோயாளிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்களால் பதைக்க பதைக்க கொண்றொழிக்கப்பட்டு வருகிறார்கள்.
கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலால் வைத்தியசாலைகள் மக்களது குடியிருப்புக்கள் பள்ளிவாயல்கள் பல்கலைக்கழகங்கள் தரை மட்டமாகியுள்ளன.
இது போக யுத்தங்களில் பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்ட வெள்ளைப் பொஸ்பரஸை இஸ்ரேல் விமானங்கள் காஸாவில் வீசிவருகின்றன.
இஸ்ரேலின் இந்த தறிகெட்ட நடவடிக்கைகளால் அப்பிராந்தியம் யுத்தக் காடாக மாறியுள்ளது. அரபு நாடுகளில் மக்கள் கொதித்து எழுந்து வருகிறார்கள்.
இந்த நிலை நீடிக்குமாயின் யுத்த எல்லை வியாபிக்கலாம் என்ற பீதியும் முழு உலகினதும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.எனவும் தேசிய ஷூரா சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.