தென் மாகாணத்தில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவசர நிலை காரணமாக தென் மாகாண கல்விச் செயலாளரின் அனுமதிக்கு உட்பட்டு தெனியாய கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (23) விடுமுறை வழங்கப்பட்டதாக தெனியா பிராந்திய கல்விப் பணிப்பாளர் தம்மிகா பிரியதர்ஷனி தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக மாத்தறை – கொட்டபால வீதியில் கிரிலிப்பன பகுதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிலிப்பன பிரதேசத்தில் இருந்து மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாகவும், சிறிய வாகனம் கூட அப்பகுதி வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மொரவக – நெலுவ வீதியும் மொரவக நகரத்திலிருந்து தடைப்பட்டுள்ளதுடன், கிரம ஓயா நிரம்பி வழிவதால் பிடபெத்தர பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது.
நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், தாழ் நிலப் பகுதிகளில் மேலும் வெள்ள பெருக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.