இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (06) கூடவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவினால் தாம் தாக்குதலுக்குள்ளானதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் கீழ்தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென டயானா சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
இதனையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவினால் சபை தற்காலிகமாக ஒத்திக்கப்பட்டது.
அமர்வு மீண்டும் ஆரம்பமான நிலையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து, டயானா கமகே அநாகரீகமான வார்த்தைப் பிரயோகம் செய்தமை மற்றும் மோசமான வகையில் நடந்துகொண்ட காணொளிக் காட்சிகளை காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்தார்.
இந்த நிலையிலே, சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது.
விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பாக்கீர் மாகார் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் குறித்த குழுவினால் அண்மையில் அவதானிக்கப்பட்டது.
இந்த நிலையிலே, சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் இன்று இந்தக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் குழுவிற்கு இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்று இடம்பெறவுள்ள இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
விசாரணைகளின் படி ஏதேனும் ஒரு தரப்பின் மீது குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.