‘பலஸ்தீன்’ என்கிற வார்த்தை சர்வதேச மேடையில் இஸ்ரேலை ஆழமாகச் சேதப்படுத்துகிறது!

Date:

இஸ்ரேல்- பலஸ்தீன போர் ஒரு மாதம் கடந்த நிலையில் போர் தீவிரம் குறித்து ‘சமரசம்’ சஞ்சிகையின் வெளிவந்த கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.

காஸாவின் மீதான முற்றுகைகளும் குண்டு வீச்சுகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அங்கு சியோனிஸ இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோரைக் கொன்று, ஊனமாக்கி, பல குடும்பங்களை சிவில் பதிவேட்டிலிருந்து துடைத்தெறியும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

காஸா மீதான இந்தக் கோரத் தாக்குதல் வரலாற்றில் ஃபலஸ்தீனின் இன்னொரு பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதை நோக்கி நகர்ந்து வருகிறது.

பலஸ்தீனர்களின் மீது விழும் வெடிகுண்டுகளைவிட அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் பாசாங்கு செய்வது மிகவும் கொடியது.

தற்போது பலஸ்தீனில் நடைபெறுவது ஒட்டுமொத்த சமூகத்தை அவர்கள் வாழ்ந்த தடமே இன்றி வரலாற்றிலிருந்து மொத்தமாகத் துடைத்தெறியும் செயல்.

அப்பாவி பலஸ்தீனர்களின் உயிரை (குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளை) எப்படியாவது கொன்று விட வேண்டும் என்கிற அவர்களின் சீர்குலைந்த இராணுவ நடவடிக்கைகளைக் காட்டிலும், அவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை முழுவதுமாக அழிக்க சியோனிஸ தீவிரவாதிகள் செய்யும் பரப்புரை மிகவும் கீழ்த்தரமானது, கொடூரமானது.

ஊடக மொழியிலிருந்து பலஸ்தீன் என்ற வார்த்தையை அழிக்கும் சதி வேலையை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளது.

ஓப்பன் ஆப்பிள், கூகுள் மேப் உள்ளிட்ட இணைய நிலப்படத் தளங்களில் பலஸ்தீன் என்று தேடினால் உங்களுக்கு எந்த பதிலும் கிடைக்காது. மாறாக இஸ்ரேலைக் காட்டும்.

பலஸ்தீன் பகுதிகளின் பெயர்களுக்கு முன்னால் அவர்களின் உண்மையையும் வேதனையையும் சுமந்துகொண்டிருந்த ‘ஆக்கிரமிக்கப்பட்ட’ (Occupied) என்ற சொல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

1948 வரை அட்லஸ் வரைபடங்களில் கொடிகள், படங்கள், பண்பாடு, பழைய நாணயங்கள் என அனைத்திலுமே ‘பலஸ்தீன்’ என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுவந்த ஒரு நாட்டின் இருப்பே பொய் எனக் கட்டமைக்கப்படுகிறது.

இன்றைய அந்நிலத்தில் வாழும் பல முதியவர்கள் இஸ்ரேல் நாட்டை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் அவர்கள் வாழ்ந்த, அனுபவித்த அனைத்தும் பொய் என்று சொல்லப்படுகிறது.

‘பலஸ்தீன்’ என்கின்ற வார்த்தையே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது. பலஸ்தீனைத் திட்டமிட்டு நமது உணர்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் போர்களிலும் என அனைத்திலும் சத்தமின்றி அழிக்கப்பட்டு வருகிறது. பலஸ்தீனை ஆக்கிரமித்து, பலஸ்தீன் மக்களுக்கு எதிராக தற்போது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டம் ‘இஸ்ரேல் – ஹமாஸ்’ போராகவே பேசப்படுகிறது.

ஆனால் அங்கு நடக்கும் யுத்தம் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமானது அல்ல. பலஸ்தீன் நாட்டிற்கும் இஸ்ரேலுக்குமான யுத்தம். ‘பலஸ்தீன்’ என்ற அந்நாட்டின் பெயரையே புறக்கணித்து உலக அளவில் ஊடகப் பரப்புரை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் நாடு என்று குறிப்பிடப்படுவதால் அது அமைதியை விரும்பும் நாகரிக ஜனநாயகம் என்கிற நல்லவன் பாத்திரம் அதற்கு வழங்கப்படுகிறது.

இதனால் ஹமாஸ் என்பது பயங்கரவாதக் குழு, காட்டுமிராண்டித்தனமான போராளிக் குழு என ஏற்கனவே உலக அளவில் முஸ்லிம்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து வெறுப்பு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்படுகிறது.

இஸ்ரேல் தன்னை மத்திய கிழக்குப் பகுதியின் ஒரே ஜனநாயகமாக மார்தட்டிக்கொள்கிறது. இதுவும் மிகப் பொய்யான கூற்றே! இஸ்ரேலிய பிரதமர் நீதித்துறையைத் தொடர்ந்து மீறியும் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார்.

மேலும் அவரால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் பலரும் தங்களை பாசிஸ்டுகள் என வெளிப்படையாக அறிவிக்கின்றனர். ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், அமேன்ஸ்டி மட்டுமின்றி பல இஸ்ரேலின் மனித உரிமை நிறுவனங்களே இஸ்ரேலை ஒரு நிறவெறி அரசு, சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர் எனக் கூறுகின்றன.

‘பலஸ்தீனை’ நயவஞ்சகமாக கதையாடலிலிருந்து நீக்குவதன் மூலம் அக்டோபர் 7 மட்டுமல்லாமல் அது பலஸ்தீன் மக்களை 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்த வரலாற்றையும் அவர்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றிய கேள்விகளையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறது.

சுருங்கச் சொன்னால் இந்த ‘பலஸ்தீன்’ என்கிற வார்த்தை சர்வதேச மேடையில் இஸ்ரேலை ஆழமாகச் சேதப்படுத்துகிறது.

உலகறிந்து நெடுங்காலமாக இஸ்ரேல் நிகழ்த்திய ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு, இனப்படுகொலைகளின் கோரக் கதைகளை ‘பலஸ்தீன்’ என்கிற வார்த்தை சுமந்துகொண்டு நிற்கிறது.

அந்த வார்த்தை இந்த உலகத்தின் கடைசி மனிதனால் உச்சரிக்கப்படும் வரையில் இஸ்ரேல் செய்த, செய்து வருகின்ற குற்றங்களை அதனால் மறுக்கவியலாது.

பலஸ்தீனின் தார்மிக எடை மிகவும் கனமானது. ஒவ்வொரு முறை பலஸ்தீன் என்கின்ற வார்த்தை உச்சரிக்கப்படும்போது இஸ்ரேலின் பொய்ப் பரப்புரையின் கட்டமைப்பில் விரிசல் விழும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும்.

இப்படி இஸ்ரேல் என்னதான் தீவிரமாக முயன்றாலும் இஸ்ரேலின் கைகளில் படிந்துள்ள கோடான கோடி பலஸ்தீனர்களின் இரத்தக் கரையைத் துடைக்க முடியாது.

அதனால்தான் சியோனிஸ இஸ்ரேல் பலஸ்தீன் மீது இழைத்த குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக ‘பலஸ்தீனை’ முழுவதுமாக அகற்றி விட வேண்டும் என்று எண்ணுகிறது. அதன் ஒரு பகுதியாக நிலப்படங்களிலிருந்து அதனை முழுவதுமாக அழித்தும் விட்டது. ஊடக மொழியிலிருந்து அகற்றவும் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் ஐநா சபையின் முன் இஸ்ரேல் தன்னை உலக வரைபடத்திலிருந்து அழிக்க நினைக்கும் காட்டுமிராண்டித்தனமான நாடுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுகிறது. இது முரண் நகையாக இருக்கலாம். ஆனால் அதன் பாசாங்கு மிகவும் கொடியது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...