திருக்குர்ஆனுக்கு சேவை செய்வதிலேயே தன் இறுதி மூச்சு வரை காலத்தை கழித்த மேதை வி.அப்துர் ரஹீம்!

Date:

குறிப்பு: அண்மையில் சவூதி அரேபியாவில் காலமான பிரபல தமிழ்நாடு வாணியம்பாடியை பிறப்பிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் கலாநிதி வி. அப்துர் ரஹீம் அவர்களின் சேவைகளை ஞாபகப்படுத்தும்  சிறப்பு கட்டுரை!

திருக்குர்ஆனின் செய்திகளை உலகத்தார் அனைவருக்கும் கொண்டு சேர்க்கின்ற அறப்பணியில் ஓயாமல், ஒழியாமல் உழைத்து வந்த முன்மாதிரி அறிஞர்.

டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்கள் கடந்த 18ஆம் நாள் இறைவனிடம் மீண்டுவிட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் – நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவன் பக்கமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்).

அவருக்கு வயது 90. தம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் இறைவாக்கு இறங்கிய மொழியின் சேவையிலும் திருக்குர்ஆனின் சேவையிலும் மனநிறைவோடு செலவிட்டு முத்திரை பதித்தவர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக அரபி மொழிக்காக அவர் ஆற்றிய சேவை மலைக்கச் செய்வதாகும். ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மாணவர்கள் அவரிடம் நேரடியாகவும் இணைய வழியாகவும் பயின்றிருக்கின்றார்கள்.

அவருடைய புத்தகங்கள் மூலமாக அரபி மொழியைப் பயின்றவர்களோ எண்ணிலடங்காதவர்கள். அரபியில் மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் என்று பன்னிரு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

பன்னூலாசிரியரான இவர் அரபி, ஆங்கிலம், உர்தூ ஆகிய மொழிகளில் அறுபது நூல்களை எழுதியிருக்கின்றார். அவருடைய பெரும்பாலான நூல்களை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) வெளியிட்டுள்ளது. சாதனைகள் பெரிதாயினும் அவர் புகழ், விளம்பரம் போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி நின்ற பேரறிஞர்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போன்று பால்யப் பருவத்திலேயே மொழியின் மீதான மோகமும் பேரார்வமும் கொண்டிருந்தார். குர்ஆன் ஓதுவதற்காக அவருடைய பெற்றோர் மௌலவி ஒருவரிடம் அவரை அனுப்பினார்கள். அந்தச் சின்ன வயதில் மௌலவியிடம் ‘பூ’-வுக்கு அரபியில் என்ன சொல்வார்கள் என்கிற அவருடைய கேள்வியைக் கண்டு அந்த மௌலவியே வாயடைத்து நின்றார்.

பொருள் அறியாமல் ஓதுவதானது அவருக்குச் சிறுவயதிலேயே உடன்பாடானதாக இருக்கவில்லை. ஆங்கிலப் பேராசிரியராகத் தம்முடைய ஆசிரியப் பணியைத் தொடங்கியிருந்தாலும் அரபி மொழியின் தனித்துவம் மிக்க ஆசானாக முத்திரை பதித்துவிட்டு மறு உலகிற்குச் சென்றிருக்கிறார்.

1933இல் வாணியம்பாடியில் அப்துல் சுப்ஹான் என்கிற வணிகருக்குப் பிறந்தவர்தான் டாக்டர் வி.அப்துர் ரஹீம். சென்னை பிரசிடன்சி கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்று பின் சொந்த ஊரில் இஸ்லாமியா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அரபி மொழியின் மீதான பற்று நீறு பூத்த நெருப்பாக அணையாமல் இருக்க, சென்னை பல்கலைக் கழகத்தில் அஃப்ஸலுல் உலமா பட்டம் பெற்றார். தொடர்ந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் அரபி மொழியில் எம்.ஏ பட்டம் பெற்றார். இஸ்லாமியா கல்லூரியில் அரபித் துறை தொடங்கப்பட்ட போது அதன் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அந்தக் காலத்தில் அரபுலகத்தில் தலைசிறந்த கல்விக் கேந்திரமாகத் திகழ்ந்த எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலே எம்.ஃபில், பிஹெச்டி பட்டங்களைப் பெற்றார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்த நிகழ்வு சுவையானது.

அப்போது எகிப்து அதிபராக ஜமால் அப்துன் நாசர் பொறுப்பேற்றிருந்தார். வாணியம்பாடியில் இருந்த டாக்டர் சாஹிப் 1963இல் எகிப்து அதிபருக்குப் பெருநாள் வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பினார். அதில் தனக்கு அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பயில ஆசையாக இருப்பதாக அரபியிலேயே எழுதி இருந்தார். அனுப்பிவிட்டு அதைக் குறித்து மறந்தும் போனார்.

ஆனால் மூன்று வாரங்களுக்குப் பிறகு எகிப்தின் துணை அதிபர் ஹுசைன் அல்ஷாஃபி அவர்களிடமிருந்து டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்களுக்குக் கடிதம் வந்தது. அதில் ‘அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நீங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றீர்கள். இந்தக் கடிதத்தைக் காண்பித்து எகிப்து தூதரகத்தில் விசா பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. எல்லாமே அல்லாஹ்வின் அருளும் கிருபையும் என்று மகிழ்ந்தார்.

1964இல் எகிப்துக்குச் சென்ற போது அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ அங்குச் செல்லாது என்றும் நுழைவுத் தேர்வு ஒன்று எழுத வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. போன மூன்றாம் நாள் தேர்வு எழுதினார்; வென்றார். தொடர்ந்து அரபி மொழியும் பார்சி மொழியும் என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதினார்.

1964இல் எகிப்துக்குச் சென்ற டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்கள் அதன் பிறகு வாழ்நாள் முழுக்க வெளிநாடுகளிலேயே சேவையாற்றினார். சூடான், அமெரிக்கா, பிரிட்டிஷ் கயானா, ஜெர்மனி என்று பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார்.

சவூதி மன்னர் ஃபஹத் காலத்தில் மதீனாவில் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட போது வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து பயில்கின்ற அரபி தெரியாத மாணவர்களுக்கு அரபி மொழியைக் கற்பிப்பதற்காக ‘தஅலிம் அல் லுகத்துல் அரபியா லிகைர் அல்நாதிகீன பிஹா’ என்கிற பெயரில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில் ஷேக் முஹம்மத் அஹ்மத் என்கிற ஒரே ஒரு ஆசிரியர் இந்த வகுப்புகளைக் கவனித்து வந்தார். அதே நேரத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த டாக்டர் அப்துர் ரஹீம் இந்தத் துறை யில் சேவையாற்ற விரும்புவதாகத் தாமாக முன் வந்து பல்கலைக் கழகத் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களுக்கு எழுதினார். இவ்வாறாக அந்தத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். 37 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார்.

டாக்டர் அப்துர் ரஹீம் அரபி அறியாத மக்களுக்கு அரபி மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தனி பாட நூல்களையே எழுதினார். ‘துரூஸுல் லுகத்துல் அரபியா லிகைர் அல்நாதிகீன பிஹா’ என்கிற இந்த பாடநூல்கள் தாம் அவருடைய தலைசிறந்த படைப்பு (மேக்னம் ஓபஸ்).

உலகமெங்கும் இவை மதீனா புக்ஸ் என்று புகழ் பெற்றன. இந்த நூல்களைக் கொண்டு அரபி மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் இலட்சக்கணக்கானவர்கள். இந்தியாவில் இந்த நூலை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (ஐஊகூ) தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

புதியதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்ற சகோதர, சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்வதற்காகத் தனி நூல் ஒன்றை எழுதித் தருமாறு மௌலானா எம்.ஏ ஜமீல் அஹ்மத் விண்ணப்பிக்க டாக்டர் அத்தியப்யான் எனும் நூலை எழுதினார். அந்த நூல் முற்றிலும் மாறுபட்ட, தனித்துவமான நூல்.

அரபி, தமிழ் ஆகிய இரண்டிலும் உள்ள பொதுவான எழுத்து களை முதலில் கற்பித்து, அதனைத் தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட எழுத்துகளைக் கற்பிக்கின்ற புதுமையான பாணியை டாக்டர் அப்துர் ரஹீம் அந்நூலில் கையாண்டிருப்பார். இந்த நூலின் உதவியைக்கொண்டு நாற்பதே நாள்களில் திருமறையை ஓதக் கற்றுக் கொண்டவர்கள் ஏராளம்.

தொடர்ந்து அரபி இலக்கணத்தைக் கற்பிக்கின்ற பாடநூல்களில் கிரேக்கக் கதைகளும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட புனைவுகளும் எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டிருப்பதை மாற்றி, முற்றிலும் ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள், திருமறையின் அத்தியாயங்களைக் கொண்டு டாக்டர் அப்துர் ரஹீம் இலக்கணத்தைப் போதித்து புத்துணர்வை ஊட்டினார்.

திருக்குர்ஆனுக்காக தனி எழுத்துரு உருவாக்கப்பட வேண்டும் என்பது டாக்டரின் பேரார்வமாக இருந்தது. அதற்காக யுனானி மருத்துவரும் மௌலானா எம்.ஏ. ஜமீல் அஹ்மத் அவர்களின் குமாரருமான டாக்டர் முஹம்மத் சுஹைப் அவர்களின் துணையுடன் கணினி மூலமாக குர்ஆனை வடிவமைப்பதில் வெற்றி பெற்றார்.

கையெழுத்து வடிவில் வெளியாகின்ற திருமறையை ஓதுவதில் இருக்கின்ற சிக்கல்களை இந்தக் கணினி வடிவம் முழுமையாகத் தீர்த்து வைத்தது.

1992இல் சவூதிமயமாக்கல் நடவடிக்கையில் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அவருடைய பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் சவூதி அரசாங்கத்துக்கு அவரைத் துறக்க மனம் இல்லை. மதீனாவில் கிங் ஃபஹத் குர்ஆன் பிரிண்டிங் காம்ப்ளெக்ஸ் என்கிற பெயரில் நிறுவப்பட்ட குர்ஆன் அச்சடிக்கும் நிறுவனத்தின் இயக்குநராக டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டது. அங்கு அவருடைய மேற்பார்வையில் 74 மொழிகளில் குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் வெளியாயின. அங்குதான் டாக்டர் அவர்கள் தம்முடைய வாழ்வின் எஞ்சிய 30 ஆண்டு களைக் கழித்தார்.

இவ்வாறு குர்ஆனின் மொழிக்காகவும் குர்ஆனுக்காகவும் வாழ்நாள் முழுக்க சேவையாற்றிய அவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருதும், சென்னை பல்கலைக்கழகத்தின் சதக்கத்துல்லாஹ் அப்பா விருதும், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் மௌலானா எம்.ஏ. ஜமீல் அஹ்மத் விருதும் வழங்கப்பட்டன. ஆனால் விருது, புகழ், விளம்பரம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவராகவும் மௌன உழைப்பாளியாகவும் மிளிர்ந்தார்.

எல்லாவற்றையும் இறைவனுக்காக அர்ப்பணித்து அழகான வாழ்க்கையை வாழ்ந்தார். அற்புதமான ஆற்றல்கள் நிறைந்தவராக முத்திரை பதித்தார். வியத்தகு சாதனைகளைச் செய்து முடித்துவிட்டே மூச்சுவிட்டார்.

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பபானாக! சுவனத்தின் மிக உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக! ஆமீன்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...