தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் அனைத்து நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தீர்மானித்துள்ளார்.
அதன்படி மருந்து பரிவர்த்தனை என்பது மனித உயிர்களுடனான பரிவர்த்தனை என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவழிப்பதால், தரமான மருந்துகளை வழங்குவது நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உயர்தர மருந்துகளை வழங்குவதற்கான அமைப்பை தயார் செய்ய விரும்புவதாகவும், இனிமேல் மருந்துகளின் விலையை குழு ஒன்றின் மூலம் தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 500 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தேவையான மருந்துகளை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்வதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சரியான முறையில் மருந்துகளை இறக்குமதி செய்வது அவசியம் என தெரிவித்த அமைச்சர், கண் வில்லை , சிரிஞ்ச் போன்ற உபகரணங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.