குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபாவின் மறைவுக்காக அனுதாபம் தெரிவிப்பதற்காக இலங்கையிலுள்ள குவைத் தூதரம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அனுதாபப் புத்தகத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அனுதாபம் தெரிவிக்க வரும் பிரமுகர்களை தூதரக இடைக்காலப் பொறுப்பதிகாரி உஸ்மான் அல் உமர், நிர்வாக விவகாரங்களின் இராஜதந்திர இணைப்பதிகாரி ஹமத் அல் அஜமி ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்கள் எனப் பலரும் தூதரகத்துக்கு வந்து அனுதாபம் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்களின் பிரசன்னமும் மனப்பூர்வமான அனுதாபங்களும் மறைந்த தலைவருக்கான இரங்கலாக அமைந்ததாகவும் இந்தத் துக்ககரமான நேரத்தில் நாடுகளுக்கிடைய ஆழமான மதிப்பையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்துவதாக அமைந்ததாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.