சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவிலிருந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த சிறுவன் கடந்த மாதம் 5 ஆம் திகதி மலசலக்கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன் போது உயிரிழந்த சிறுவனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்ட சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கியதோடு, வழக்கு முடியும் வரை இந்த வழக்குகளோடு தொடர்பற்ற நேரடி சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடை செய்யும் முகமாக கட்டளையை வழங்குமாறு நீதிமன்றினை கோரியிருந்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிவான் சாய்ந்தமருது பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளை பெற்று மன்றிற்கு அறிக்கை சமரப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் சந்தேகநபருக்கு எதிராக 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிரிதொரு மாணவனை தாக்கிய சம்வம் தொடர்பில் மற்றுமொரு வழக்கு விசாரணையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.