3 மாத காலப் போர்; பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டது: ஐ.நா விடுக்கும் எச்சரிக்கை

Date:

மூன்று மாத காலப் போருக்குப் பிறகு பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள வேளையில், இஸ்ரேல் நேற்று ஜனவரி 6 ஆம் திகதி காஸா மீது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது.

நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் ஜனவரி 6ஆம் திகதி அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பஞ்சம் தலைவிரித்தாடுவதாலும், நோய் பரவுவதாலும் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐநா எச்சரித்துள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதல்களால் பொதுமக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய அதிகாரத்துவ அகதிகள் முகாமிலிருந்து ரஃபாவுக்கு தப்பிச் சென்ற 60 வயதான அபு முகம்மது, காஸாவின் எதிர்காலம் “இருண்டு கிடக்கிறது, மிகவும் சிரமமானது” என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அவ்வட்டாரத்தின் பெரும்பகுதி ஏற்கனவே சிதைந்துகிடக்கிறது. “காஸா வாழ முடியாததாக மாறிவிட்டது,” என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் ஜனவரி 5ஆம் திகதி கூறினார்.

தாக்குதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதார சேவைப் பற்றாக்குறை ஆகியவை காஸாவில் “1.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கொடுமையான சுழற்சியாகி பயமுறுத்துகிறது” என்று ஐ.நா குழந்தைகள் அமைப்பு எச்சரித்தது.

இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து காஸாவின் வடக்கு, மத்திய பகுதி, தெற்கு என அனைத்துப் பகுதிகளிலும் சண்டையிடுவதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.

காஸாவின் தெற்கு நகரங்களான கான் யூனிஸ், ரஃபாவுடன் மத்திய காஸாவின் சில பகுதிகளையும் இஸ்‌ரேல் தாக்கியதாக ஏஎஃப்பி தெரிவித்தது.

மத்திய நகரான தீர் அல் பலாவில் உள்ள மருத்துவமனை ஒன்று, அங்கு 35 பேர் கொல்லப்பட்டதாக கூறியது.

அதற்கு முந்திய 24 மணி நேரத்தில் காஸா முழுவதுமுள்ள ராணுவ நிலைகள், எறிபடை, ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்கு உட்பட 100க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தனது படைகள் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இதே காலகட்டத்தில் 162 உயிரிழப்புகள் பதிவானதாக ஹமாஸ் வட்டார சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய போர்க்களமாக மாறியுள்ள கான் யூனிஸ் நகரில் நடந்த மோதல்களில் பாலஸ்தீனர்  பலர் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் குறிப்பிட்டது.

வடக்கு காஸாவிலுள்ள புளூ பீச் ஹோட்டலிலுக்கு கீழே படைகள் சுரங்கங்களைக் கண்டுபிடித்ததாக இராணுவம் கூறியது. அவை “பயங்கரவாதிகளால் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்டன,” என்றும் அது குறிப்பிட்டது.

பலஸ்தீன செம்பிறை அமைப்பு, கான் யூனிஸில் உள்ள அல் அமல் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதியில் குண்டு வீச்சுத் தாக்குதலும் ஆளில்லா ஊர்தி தாக்குதலும் இடம்பெற்றதாக அறிவித்தது. தாக்குதலில் வளாகத்தில் தஞ்சமடைந்திருந்த ஐந்து நாள் குழந்தை உட்பட ஏழு இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டதாக அது குறிப்பிட்டது.

மருத்துவமனையில் இடம்பெயர்ந்த மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அதேநேரத்தில் கொள்ளைநோய் பரவல் காரணமாக மனிதாபிமான பேரழிவை எதிர்நோக்குவதாக மத்திய காஸாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் உயர் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலியப் படைகள் “உயர்மட்ட ஆயத்த நிலையில்” இருப்பதாக  ஹக்காரி கூறினார்.

அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இஸ்ரேல் அத்தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.

அதிகாரபூர்வ இஸ்ரேலியப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏஎஃப்பி கணக்கிட்டவரையில், 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 1,140 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.

இஸ்ரேல் கூற்றுப்படி, 250 பேர் பிணை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 132 பேர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. 24 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

பதிலடியாக, இஸ்ரேல் இடைவிடாத நடத்திவரும் குண்டு வீச்சுகள், தரைவழித் தாக்குதல்களில் குறைந்தது 22,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...