அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது.
இதையடுத்து, ராமர் கோவில் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன.
இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி வெறும் கற்களை கொண்டே இந்த கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.
இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது,
கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்ற தொடர் நிகழ்வுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் அதிகரித்து வரும் பெரும்பான்மைவாதத்தை காட்டுகிறது.
இந்தியாவில் அரசியல், பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதற்கான முயற்சிகளின் முகமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்வா சித்தாந்தம் மத நல்லிணகத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை மக்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.