மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
ஓராண்டை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரேனிய போர் கைதிகளை ஏற்றி சென்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. ரஷ்யா தரப்பில் இதனை விபத்து என்று சொன்னாலும், உக்ரைன் ராணுவம்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக விமானம் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.
பெல்கோரோட் பகுதி ரஷ்ய புவியியல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இது இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதி உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் உக்ரைன் கப்பலில் பிடிபட்ட 65 உக்ரேனிய கைதிகள் இருந்துள்ளனர்.
இவர்களை இடமாற்றம் செய்யவே விமானத்தில் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுடன் விமானத்தில் ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து விளக்கமளித்துள்ள பெல்கொரோட் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ், “விபத்துக்குள்ளான இராணுவ விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.