தெற்கு காசாவில் உள்ள ரஃபா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் அர்தூகான் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் அல் சிசி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
துருக்கியின் ஜனாதிபதி அர்தூகான் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்த பின்னர், ஒரு தசாப்தத்திற்கு பிறகு கெய்ரோவிற்கு அவர் முதலாவதாக விஜயம் செய்கிறார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய சவால்கள், குறிப்பாக காசாவில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சுதந்திர பலஸ்தீனிய அரசை நிறுவுவதற்கான இறுதி இலக்குடன் இஸ்ரேல்-பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு, உடனடி போர்நிறுத்தம் மற்றும் மேற்குக் கரையில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை எகிப்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து மட்டங்களிலும் எகிப்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைக்க துருக்கி உறுதியாக இருப்பதாக அர்தூகான் தெரிவித்தார்.
மேலும், ‘காசாவில் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க எகிப்திய மக்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம், ஒற்றுமையுடன் நிற்போம் ‘ என்றும் அவர் கூறினார்.
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப எகிப்துடன் ஒத்துழைக்க துருக்கி தயாராக இருப்பதாகவும், குறுகிய காலத்தில் எகிப்துடனான வர்த்தகத்தை 15 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு உறுதியளித்ததாகவும் அர்தூகான் கூறினார்.
காசாவில் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, தற்போது 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மீது இஸ்ரேல் முழு வீச்சில் படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கத் தயாராகும் நிலையில் அதற்கு முன்னதாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.