முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மத்ஹபுகள் மற்றும் பிரிவுகளுக்கிடையே பாலம் அமைத்தல்’ என்ற தலைப்பிலான மாநாடொன்று சவூதி அரேபியா மக்கா நகரத்தில் ஞாயிறன்று (17) நடைபெற்றது.
ஹரம் ஷரீஃப் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரு நாள் மாநாட்டில் உலகின் முன்னணி முஸ்லிம் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சவூதி அரேபிய மன்னர் சல்மானின் அனுசரணையில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது.
சவூதியின் பிரதான முஃப்தியும் மூத்த அறிஞர்கள் கவுன்சிலின் தலைவருமான ஷேஹ் அப்துல் அஸீஸ் அல் அஷ்ஷேஹ் தனது ஆரம்ப உரையில்,
‘இஸ்லாம் ஒரு ஒற்றுமையின் மதம். அது ஐக்கியத்தை வலியுறுத்துகிறது. பிளவுபட்டுப் போவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி எச்சரிக்கின்றது’ எனக் கூறினார்.
மேலும் நபியவர்களின் வழிமுறையான சுன்னாவானது முஸ்லிம்களை ஒருங்கிணைத்து, பகைமை மற்றும் வெறுப்புணர்வை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறைகளையே கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
‘முஸ்லிம்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்களைப் பிளவுபடுத்தும் அனைத்தையும் தவிர்ப்பதற்கும் இயலுமான சகலவற்றையும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் இந்த ஐக்கியத்தின் மகத்தான நிலைப்பாட்டை முஸ்லிம் மார்க்க அறிஞர்களை இலக்காக வைத்தே நாம் வலியுறுத்துகின்றோம்’ எனவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
அறிஞர்கள் பரஸ்பரம் கண்ணியத்தை பேணியவாறும் தீனின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதே அவர்கள் மத்தியில் ஒற்றுமைச் சூழல் உருவாகின்றது.
‘முஸ்லிம்கள், பொதுவாக, அறிஞர்களை முன்மாதிரியாகக் கருதுகின்றார்கள் அவர்களையே பின்பற்ற விரும்புகின்றார்கள்’ என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களுடைய நலவைப் பேணும் இது போன்ற முன்னெடுப்புக்களை ஏற்பாடு செய்தமைக்காக மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு ஷேஹ் அவர்கள் தனது ஆரம்ப உரையின் போது நன்றி தெரிவித்தார்.
மாநாட்டில் உரையாற்றிய பொதுச்செயலாளர் கலாநிதி முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா தனதுரையில், பல்வேறு முஸ்லிம் பிரிவுகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஆக்கங்களை வெளிப்படுத்துவதே முஸ்லிம் அறிஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
‘மக்கா பிரகடனத்தின் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து, கண்ணியமிக்க ஹரத்தின் எல்லைக்குள் புனித ரமழான் மாதத்தில் முதல் தடவையாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை ஆரம்பித்து வைப்பதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்’ என்றும் அவர் கூறினார்.
உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் இது போல ஒன்றுகூடுவது முஸ்லிம் உலகம் நல்ல நிலையில் இருப்பதையே காட்டுகின்றது என்று கூறிய கலாநிதி அல்-இஸா, ஈமானையும் ஏனைய தூண்களையும் வெளிப்படுத்துகின்ற இஸ்லாத்தின் முக்கிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருவதை உறுதி செய்யும் வகையில் இந்த மாநாடு மூலம் பங்களிப்பு செய்தமைக்காக அவர் பங்கேற்ற அறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பிரிவினை மற்றும் மோதலைத் தூண்டுவதற்கு சிலர் பாரம்பரிய மற்றும் நவீன தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதாக எச்சரித்த கலாநிதி அல்-இஸ்ஸா ‘இவ்வகையான மதவெறியை எதிர்ப்பதற்கான ஒரே வழி, இஸ்லாத்தின் அடிப்படைப் பெறுமானங்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வதாகும்’ என அறிவுறுத்தினார்.
முஸ்லிம்களிடையே ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா கவுன்சிலின் தலைவரும் இஸ்லாமிய ஃபிக்ஹ் அகடமியின் உறுப்பினருமான ஷேஹ் அப்துல்லா பின் பய்யாஹ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அதை அடைய முடியும் எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் ஹுசேன் இப்ராஹிம் தாஹா, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சவூதி அரசின் முன்னெடுப்புக்களில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு இருப்பதை சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பெரிதும் பாராட்டினார்.
ஈரான்,எகிப்து,இந்தோனேசியா,பாகிஸ்தான்,துருக்கி,ஈராக்,மலேசியா மற்றும் பல ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்களும் மாநாட்டில் உரையாற்றினர்.
மாநாட்டின் தீர்மானங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களான உலக முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
அத்துடன் முஸ்லிம்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் நடுநிலைப் போக்கிலானதொரு பொது கலாச்சாரம் தொடர்பாக ஆராய்ச்சிகளையும் பிரச்சாரங்களையும் அதிகரிக்கும் வகையில் உலக முஸ்லிம் லீக்கின் இஸ்லாமிய ஃபிக்ஹ் அகாடமி மற்றும் OIC யின் அனுசரணையில் இயங்கும் சர்வதேச இஸ்லாமிய ஃபிக்ஹ் அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் (18), இஸ்லாமிய உலகின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமை மற்றும் நாகரிகமான கலந்துரையாடல் என்ற பிரதான தொனிப்பொருளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.