இப்றாஹீம் ஹஸரத் எனும் பன்முக ஆளுமையை நம் சமூகம்  பயன்படுத்த  தவறிவிட்டது: அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத்

Date:

இப்றாஹீம் ஹஸரத் எனும் பன்முக ஆளுமையை நம் சமூகம்  பயன்படுத்த  தவறிவிட்டதாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் கவலை தெரிவித்துள்ளார்.

பல்வேறு பணிகளினூடாக மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவருமான ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களின்  மறைவையொட்டி  ஏ.ஸி. அகார் முஹம்மத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முஸ்லிம்கள் இப்றாஹீம் ஹஸரத் என்ற மிகப் பெரும் ஆளுமையை இழந்துவிட்டது. அவர் இலங்கை மண் ஈன்ற அரியஇ தனித்துவமான ஓர் அறிவாளுமை சமூகத் தலைமை; செயற்பாட்டாளர்; ஆன்மீக வழிகாட்டி. அனைத்துக்கும் மேலாக அவர் உயர் மனிதப் பண்புகளை சுமந்திருந்த ஒரு குணசீலர்.

இப்றாஹீம் ஹஸரத் எனது இளமைப் பருவ Role Model அடையாள புருஷர். அவரது ஆழமான அறிவாலும் பரந்த சிந்தனையாலும் கவர்ச்சியான ஆளுமையாலும் உயர் குணப்பண்புகளாலும் நான் ஆகர்ஷிக்கப்பட்டே அவருடன் சுமார் மூன்றரை தசாப்தங்களாக பயணித்தேன்.

அவரும் நானும் பல தளங்களில் பங்கேற்றோம்; பணியாற்றினோம். நான் அவரை பெரிதும் நேசித்தேன். அவர் என்னை நேசித்தார். அது அல்லாஹ்வுக்காக கொண்ட தூய்மையான நேசம்; அப்பழுக்கற்ற நேசம்!

சமூக மேம்பாட்டுக்காக ஓயாமல் உழைத்த ஒரு மனிதர் இப்றாஹீம் ஹஸரத். சமூகத்தில் ஆழமான தடயங்களை, அழியா சுவடுகளை விட்டு அவர் சென்றிருக்கின்றார்.

ஜம்இய்யதுல் உலமா முதல் ஜாமிஆ நளீமிய்யா வரை அவரது காத்திரமான பங்களிப்புகள் பரந்துபட்டவை.  அவர் தனது அனைத்து மகத்தான பணிகளையும் வரலாற்று பங்களிப்புகளையும் அடக்கமாக, ஆரவாரம் இல்லாமல் செய்துவிட்டு பயணித்திருக்கின்றார்.

அவர்   புகழை நாடி செயற்பட்டவர் அல்ல என்பதற்கு என்னைப் போன்றவர்கள் சாட்சி பகர்வார்கள். இத்தகையதொரு பெரும் பன்முக ஆளுமையை நம் சமூகம் சரியாக கண்டு கொள்ளவும் உரிய இடத்தைக் கொடுக்கவும் பயன்படுத்தவும் தவறிவிட்டது என்ற ஆதங்கம் எனது உள்ளத்தில் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.

ஆயினும் தனது இலட்சியப் பணியை தொடரக்கூடிய ஒரு சீடர் பரம்பரையை அன்னார் உருவாக்கிவிட்டே பயணித்திருக்கின்றார்கள் என்ற வகையில் மனம் ஆறுதல் கொள்கின்றது.

அவரைப் பற்றி பேசவும் பகிரவும் நிறையவே என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் வார்த்தைகளில் வடிக்கும் மனோ நிலை தற்போதைக்கு இல்லை. கண்கள் பனிக்கின்றன; இதயம் கனக்கின்றது; கவலை வாட்டுகின்றது. அவரது பிரிவு தரும் வேதனை மிகவும் கனதியானது.

யாஅல்லாஹ்! அன்னாருடைய பாவங்களை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் செய்வாயாக! அவருக்கு ஆபியத்தை நல்குவாயாக! அவரை பொறுத்தருள்வாயாக! நாளை மறுமையில் இத்தகைய மனிதர்களோடு எம்மையும் சுவன வாழ்வில் இணைத்தருள்வாயாக!

ஹஸரத் அவர்களின் பணிகளைத் தொடரும் உணர்வையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவர்களின் மாணாக்கர்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கியருள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...